சிறப்புப் பார்வை: சர்காரை திமுக அல்லவா எதிர்த்திருக்க வேண்டும்?

ஆரா

சர்கார் திரைப்படம் அதிமுகவுக்கு எதிராகத் திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்று கடம்பூர் ராஜு, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரச்சினையைக் கிளப்ப, அதிமுகவினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு சர்கார் பேனர்களைக் கிழிக்க கடந்த சில நாட்களில் அது பெரும் விவாதமானது.

எந்த அளவுக்கு என்றால் இந்தியாவையே நடு ரோட்டில் நிற்க வைத்த பாஜக அரசின் பண மதிப்பழிப்பு திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் பற்றி மக்களுக்கு ஊடகங்கள் நினைவுபடுத்த மறந்து... சர்காரையே சுற்றி வந்தன.
இந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி நம்மைத் தொடர்புகொண்டு பேசினார் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வான டேவிட் செல்வின். இலங்கைப் போரில் திமுகவின் நிலைப்பட்டால் அக்கட்சியில் இருந்து விலகிய டேவிட் செல்வின் அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அதிமுகவில் இருந்தும் தள்ளியே இருக்கிறார்.
கலைஞரைக் குறிவைத்து தாக்குகிறார்கள்
நம்மிடம் பேசிய டேவிட் செல்வின், “சார்... படமே பார்க்காத நான் நமது அமைச்சர் பெருமக்களின் அதிரடி பேட்டிகளால் என்னதான் இருக்கிறது என்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சர்கார் படம் பார்த்தேன். எனக்குப் பெருத்த அதிர்ச்சி... இந்தப் படத்தை எதிர்த்து திமுகவினர் அல்லவா போராட வேண்டும்? ஏன் அதிமுக போராடுகிறது? இந்தக் கேள்வியை பெரும் விவாதங்கள் எழுப்பும் எந்த தொலைக்காட்சி ஊடகமும் எழுப்பவில்லையே ஏன்?” என்று நம்மிடம் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார்.
சர்கார் பற்றி புதிய கோணத்தில் கேள்வி கேட்ட அவரே பதிலையும் சொல்லத் தொடங்கினார்.
“சர்கார் படத்தில் இலவச மிக்சியைத் தூக்கி எறிவது போன்ற காட்சியும், கோமளவல்லி என்ற பெயரும்தான் அதிமுகவினரை உறுத்தியிருக்கிறது. ஆனால், இதைத் தவிர படத்தில் அநேக இடங்களில் திமுகதான் டார்கெட் செய்யப்பட்டுள்ளது.
படத்தில் முதல்வராக வரும் மாசிலாமணி அதாவது பழ.கருப்பையா தனது வசனங்கள் மூலம் அப்படியே கலைஞரை நினைவுபடுத்துகிறார். ‘நான் அரை டவுசர் போட்ட காலத்துலயே இந்திய எதிர்த்துப் போராடினவன்’ என்று பேசும் அவர், ‘56 வருஷமா அரசியல்ல இருக்கேன்’ என்கிறார். இதெல்லாம் கலைஞரையே குறிக்கும் வகையில் இருக்கின்றன.
பழ.கருப்பையாவுக்கு, அளவுக்கு அதிகமாக மாத்திரை கொடுத்து சாகடிக்கும் அவரது மகள் கோமளவல்லி, 'இனி எல்லா ஊடகங்களும் உங்க பேரைத்தான் சொல்லணும். நீங்க டவுசர் போட்ட நாள் முதலான உங்கள் வரலாற்றை எல்லா டிவி சானல்களும் திரும்ப திரும்ப காட்டிக்கிட்டே இருக்கணும். இந்தியாவில் உள்ள பிரதமரில் இருந்து அத்தனை மாநில முதல்வர்களும் இங்கே வரணும்' என்று சொல்வதும், கலைஞரின் மறைவை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.
'ஒருவர் இறந்த உடன் தியாகி ஆகிவிடுவாரா?' என்று இளைஞர் கூட்டம் பழ.கருப்பையாவின் மரணத்தை விமர்சனம் செய்கிறது. பழ.கருப்பையாவின் சமாதிக்கு, கலைஞரின் சமாதி போன்ற அச்சு அசலான அமைப்பு. அங்கே வைக்கப்பட்டுள்ள கலைஞரின் பெரிய புகைப்படம் போல, சமாதியில் பழ.கருப்பையாவின் புகைப்படம், மலர் அலங்காரம் அப்படியே சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
படத்தை சன் டிவி கலாநிதி மாறன் தயாரித்துள்ளார் என்பதை நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்குப் படத்தில் திமுகவையும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரையும்தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள்” என்று சொல்லிமுடித்த டேவிட் செல்வின் தொடர்ந்தார்.
இலவச டிவியும் வீசப்படுகிறது
“இவ்வளவு வெளிப்படையாக திமுகவை எதிர்த்திருக்கும் இந்தப் படத்துக்கு எதிராகத் திமுகவினர் துரும்பைக்கூக்ட கிள்ளிப் போடவில்லை. ஆனால், அதிமுகவினரோ ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என்று ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஜெயலலிதாவுக்கு என்றைக்கு கோமளவல்லி என்ற பெயர் இருந்தது? யார் வைத்தார்கள்? ஆதாரமற்ற சில பதிவுகளைத் தவிர, ஜெயலலிதாவின் பள்ளிச் சான்றிதழ் முதலான எதிலும் பெயர் கோமளவல்லி என்று இல்லை.
அமைச்சர் பெருமக்களுக்கு கோபம் வர இன்னொரு காரணம், இலவச மிக்சி, கிரைண்டர், இலவச டிவியைத் தீயில் எரிகிறார்களாம். கலைஞர் தோற்றத்தில் வரும் பழ.கருப்பையா புகைப்படம் பதித்த மிக்சியை எரித்தால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? மேலும் இலவச மிக்சியோடு திமுக ஆட்சிக் காலத்தில் கொடுத்த இலவச கலர் டிவியையும் சேர்த்தே அந்தக் காட்சியில் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.
இந்த இலவச டிவி திட்டத்தின் அடிப்படையில் அவற்றுக்கு கேபிள் கனெக்‌ஷன் கொடுத்து அதிக பலன் அடைந்தது கலாநிதிமாறன்தான். ஆனால் அவரது தயாரிப்பில் வெளியாகும் படத்தில் இலவச டிவியும் தூக்கி வீசப்படும் காட்சி இருக்கிறது. இதை ஏன் திமுகவினர் எதிர்க்கவில்லை?” என்று கேட்கிறார் டேவிட் செல்வின்.
திமுக ஏன் எதிர்க்கவில்லை?
சர்கார் படத்தை திமுக ஏன் எதிர்க்கவில்லை என்பதற்கு நம்மிடம் விளக்கம் கொடுத்த டேவிட் செல்வின், “சர்கார் படத்தின் தொடக்கத்தில் இருந்தே விஜய்யை தளபதி என்றே புரமோட் செய்தனர். இது ஸ்டாலினைக் குறிவைப்பதாக இருக்கிறது என்று சர்ச்சைகள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஒரே தளபதி ஸ்டாலின்தான் என்று ஸ்டாலின் முன்னிலையில் வே.மதிமாறன் பேசினார். அந்த பேச்சு அடங்கிய வீடியோ யூடியூப்பில் நீக்கப்பட்டது. அதற்குக் காரணம் சன் தரப்புதான் என்றும் பேச்சு வந்தது.
இப்படி ஆரம்பத்தில் இருந்தே கலாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தது சர்கார். படம் வந்தபிறகு அது அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் சர்கார் படத்தை திமுகவினர் எதிர்த்தால், அது கலாநிதிக்கும் ஸ்டாலினுக்குமான உள் கட்சிப் போராட்டமாக பெரிதுபடுத்தப்படும். அதன் மூலம் திமுகவில் பிளவு என்பது போன்ற தோற்றம் பெரிதுபடுத்தப்படும். எனவே சர்காரை கண்டுகொள்ள வேண்டாம் என்று திமுக தலைமை முடிவெடுத்தது. ஆனால், ஒன்றுமே இல்லாத அதிமுக இதை எதிர்த்து பணமதிப்பழிப்பு நாள் பற்றிய செய்திகளை விவாதப்படுத்தாமல் பாஜகவைக் காப்பாற்றிவிட்டது” என்கிறார் டேவிட் செல்வின்.
சர்காரும் சமூக ஆர்வலர்களும்
இதுமட்டுமல்ல; சர்காரை ஆதரிப்பதற்கான காரணிகளும் இருக்கின்றன என்கிறார் டேவிட் செல்வின்.
“நான் தூத்துக்குடிக்காரன். தூத்துக்குடியில் அதிமுக - பாஜக அரசுகளின் கூட்டணியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் போராட்டத் தியாகிகளை என்னால் மறக்க முடியாது. விளம்பரம் இல்லாது இரவோடு இரவாக தூத்துக்குடி வந்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரில் உயிர் நீத்த தியாகிகள் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் சொல்லி தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் விஜய். சர்கார் படத்தில் ஜல்லிக்கட்டை பற்றி பேசி இருக்கிறார். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என எல்லாவற்றையும் பேசி இருக்கிறார். சகாயம் போல ஐஏஎஸ் அதிகாரி சற்குணம், பியூஸ் மனுஷ் ஆகிய பாத்திரங்களும் சர்காரில் வருகிறார்கள். இதற்காகவே சர்காரைப் பாராட்டலாம்” என்று முடித்தார் டேவிட் செல்வின்.

சர்கார் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ராதாரவியும், பழ.கருப்பையாவும் இன்று வரை திமுகவில்தான் இருக்கிறார்கள். படத்தில் நடித்தது ஒருபக்கம் என்றால் அவர்கள் இருவரும் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில் விஜய்யை மிகவும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவும் திமுகவுக்கு ஏற்புடையதா என்று தெரியவில்லை. இந்தப் பாராட்டு விஜய்யின் நடிப்பைப் பற்றி மட்டுமல்லாமல் விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றியதாகவும் உள்ளது. இதையெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் எப்படி அனுமதிக்கிறார்? கலைஞர் சிலை பற்றிய பேட்டிக்காக மூத்த கழக உடன்பிறப்பான டி.கே.எஸ். இளங்கோவனை பதவியில் இருந்து நீக்கிய ஸ்டாலின் இவர்கள் மீது எந்த அடிப்படையில் மௌனம் காக்கிறார் என்ற கேள்விகள் திமுகவுக்குள்ளேயே எழுந்துள்ளன.
சர்கார் பட விவகாரத்தில் திமுகவின் நிலை என்பது ‘சிம்டங்காரன்’ பாடல் போலவே புரியாத புதிராக உள்ளது.

No comments

Powered by Blogger.