மூன்று பிரிவுகளில் போட்டியிடும் ‘டூலெட்’!

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூலெட் திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று பிரிவுகளில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


ஓர் இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த டூலெட் என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் செழியனின் உதவியாளர் சந்தோஷ், ஷீலா, தருண் என்ற சிறுவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், நாடகக் கலைஞர் ஆதிரா, எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் டூலெட் திரைப்படம் மூன்று பிரிவுகளில் போட்டியிடுகிறது. சிறந்த படத்துக்கான போட்டி பிரிவில் சர்வதேசப் படங்களுடன் முதன்முதலாக ஒரு தமிழ்ப் படம் இடம்பெற்றுள்ளது. இது தவிர இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவின் சிறந்த புதுமுக இயக்குநர்கள் போட்டி பிரிவுக்கும் தேர்வாகியுள்ளது.

மேலும், இந்தியன் பனோரமா 2017-2018ஆம் ஆண்டுகளில் தணிக்கைபெற்ற சிறந்த இந்தியப் படங்களைத் தேர்வுசெய்து திரையிடுவார்கள். இந்தப் பிரிவில், டூலெட் படத்துடன் சேர்ந்து ராம் இயக்கிய பேரன்பு, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய பாரம் ஆகிய படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை டூலெட் திரைப்படம் 42 நாடுகளில், 60 விருதுகளுக்குத் தேர்வாகி அதில் 23 விருதுகளை வென்றிருக்கிறது. மேலும் 2017ஆம் ஆண்டுக்கான பிராந்திய மொழிக்கான பிரிவில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதும் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.