திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் கேமராக்கள்!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக, கிரிவலப் பாதையில் 400 எல்இடி விளக்குகள் பொருத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபத் திருவிழா, வருகிற 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 23ஆம் தேதியன்று காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 16 தற்காலிகப் பேருந்து நிலையங்களை, நேற்று (நவம்பர் 10) ஆய்வு செய்தார் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கந்தசாமி, தீபத் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். “திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் 400 எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். கிரிவலப் பாதை முழுவதும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். 2,650 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்” என்று கூறினார்.

தீபத் திருவிழாவின்போது, திருவண்ணாமலையில் ஏழு இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.