மிருணாள்: ‘சிவகாமி’யாக நடித்தது ஏன்?

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம்பெற்ற நிலையில் இந்தப் படம் தொடர்பான புதிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், 'பாகுபலி: தி பிகினிங்' மற்றும் 'பாகுபலி-2: தி கன்க்ளூஸன்' ஆகிய படங்கள் வர்த்தக ரீதியாக இந்திய அளவில் பிரமாண்ட சாதனைகளைப் படைத்தன. மேலும் அவற்றில் நடித்த நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ராணா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோருக்கும் பெரிய அளவிலான கவனத்தை அந்தப் படங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்த நிலையில்,‘பாகுபலி: பிஃபோர் தி பிகினிங்’ எனும் சீரிஸ் தற்போது உருவாகிவருகிறது. ‘பாகுபலி: தி பிகினிங்’கிற்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கதை நடைபெறுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சிவகாமி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுவதால் சிவகாமியின் இளவயது ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசித்துவந்த படக்குழு நடிகை மிருணாள் தாக்கூரை அணுகியது.
அந்த வகையில் ‘லவ் சோனியா’ படத்தில் நடித்துக் கவனம்பெற்ற மிருணாள், இந்த சீரிஸில் ‘சிவகாமி’ ரோலில் நடிக்கிறார். பிரவீன் சத்தாரு மற்றும் தேவ கட்டா ஆகியோர் இதை இயக்குகின்றனர். பிரசாத் தேவினேனி தயாரிக்கிறார். விஸ்வரூபத்தில் நடித்த ராகுல் போஸ், ரன் பட புகழ் அதுல் குல்கர்னி உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர்.பாகுபலி படப்பிடிப்பு நடந்த ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலேயே இதன் படப்பிடிப்புகளும் மூன்று பிரமாண்ட செட்டுகள் அமைத்து சமீபத்தில் தொடங்கி நடந்துவந்தது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்த சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் சார்பாக வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 9) சிங்கப்பூரில் 'ஸீ வாட் இஸ் நெக்ஸ்ட்: ஏசியா' எனும் நிகழ்வில் அந்தக் கூற்றை உறுதி செய்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ். தான் இதில் நடிப்பது குறித்துக் கூறிய மிருணாள் தாக்கூர், “சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆர்வமே. காரணம் அந்த ரோல் மிகவும் கம்பீரமானது. என்னால் சொந்த வாழ்க்கையில் நாயகத்தனத்துடன் இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், திரையில் அதுபோல நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உறுதியான ஒரு பெண்ணின் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்” என்றார்.
நெட்ஃப்ளிக்ஸில் நிகழ்ச்சிகளைப் பார்ப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகுபலி எனும் மிகப் பெரிய பிராண்டின் பெயர் பின்னால் இருக்கும் நிலையில் இந்த சீரிஸ் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. அப்படியாக இந்த சீரிஸ் கவனம் பெறும் பட்சத்தில் நடிகை மிருணாளை தங்களின் படங்களில் நடிக்க வைக்க கோலிவுட் இயக்குநர்கள் இடையே கடும் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.