ரஜினியை எதிர்த்துப் போட்டியிடுவேன்: கவுதமன்!

புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்த இயக்குனர் கவுதமன், “ரஜினிகாந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்” என்று அறிவித்துள்ளார்.


மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்த சந்தனக்காடு தொடரையும், மகிழ்ச்சி திரைப்படத்தையும் இயக்கியவர் வ.கவுதமன். ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு என்று தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். காவிரி பிரச்சினைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடந்த வேளையில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுதமன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கவுதமன், கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளிவந்தார்.


சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  (நவம்பர் 11) செய்தியாளர்களை சந்தித்த கவுதமன், நம்முடைய செய்தியில் கூறியிருந்தது போலவே புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், “எங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத பலர் எங்களை ஆண்டதும், மேற்கொண்டு ஆள நினைப்பதும் இனி ஒருபோதும் நடக்காது. வெற்றிடம் இருக்கிறது என்பதற்காக எவர் எவரோ வருவதற்கு அனுமதிக்க முடியாது. நாங்கள் அரசியல் கட்சியாக பரிணமிக்கிறோம். எங்களுக்கென்று யாரும் எதிரிகள் இல்லை. எங்கள் உரிமைகளுக்கு எதிரானவர்களே எங்களின் எதிரிகள். பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள மாநாட்டில் கட்சிப் பெயர் அறிவிக்கப்பட்டு, கொடி அறிமுகம் செய்யப்படும். கொள்கை கோட்பாடுகளையும் அங்கேயே அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.

“ரஜினிகாந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். காரணம் ரஜினிகாந்த் அவராக அரசியலுக்கு வரவில்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவரை வைத்து யார் அறுவடை செய்வார்கள் என்பது நமக்குத் தெரியும். இதனை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்” என்று குறிப்பிட்ட கவுதமன், ரஜினி, கமல் ஆகியோர் மீது கலைஞனாக அளவற்ற மரியாதை கொண்டவன் நான். ஆனால் எங்கள் மண்ணிற்கான தலைவர்களாக அவர்களை ஏற்க முடியாது. இதனை அவர்களும் புரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.