கர்நாடகாவை அதிரவைத்த ஜனார்த்தன ரெட்டி கைது!

அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.


கர்நாடகாவை அதிரவைத்த அம்பிடண்ட் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் சையது அகமது பரீத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பரீத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜனார்த்தன ரெட்டிக்கும் நிதி நிறுவன மோசடியில் பங்கு இருப்பது தெரியவந்தது. அதாவது இந்த விவகாரத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக பரீத்திடம் இருந்து ஜனார்த்தன ரெட்டி, 20.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக ஜனார்த்தன ரெட்டியை கர்நாடக போலீசார் தேடிவந்த நிலையில், அவர் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வெளியானது. அவரை கைது செய்ய நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் பெங்களூர் சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று ஜனார்த்தன ரெட்டி சரணடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அலுவலகத்தில் வைத்து நிதி மோசடி தொடர்பாக ஜனார்த்தன ரெட்டியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், இன்று (நவம்பர் 11) அவரைக் கைது செய்தனர். மேலும் அவருடைய உதவியாளர் அலி கான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அலோக் குமார் தெரிவிக்கையில், “நம்பத்தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையிலேயே ஜனார்த்தன ரெட்டியை கைது செய்யும் முடிவுக்கு வந்தோம். விரைவில் அவரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த உள்ளோம். நிதி நிறுவனம் ஏமாற்றிய பணத்தை மீட்டு, முதலீட்டாளர்களிடம் ஒப்படைப்போம்” என்று குறிப்பிட்டார்.

மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், ஜனார்த்தன ரெட்டியை வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.