எந்த ஏழு பேர்? என்று ரஜினிகாந்த் கேள்வி?

எழுவர் விடுதலை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “எந்த ஏழு பேர்” என்று ரஜினிகாந்த் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் வரப்போவதாக அறிவித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் கூறியுள்ளார். அரசியல் கட்சிக்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கும் பணியையும் மேற்கொண்டுவருகிறார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது ரஜினி கூறும் கருத்துக்கள் பல சர்ச்சைகளை உண்டாக்கிய நிலையில், பாஜகவின் குரலாக ரஜினிகாந்த் இருக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 12) செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம், எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மத்திய அரசே நிராகரித்துவிட்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எந்த ஏழு பேர் என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து நிருபர்கள் விளக்கிய நிலையில், “அது குறித்து தற்போதுதான் கேள்விப்பட்டுள்ளேன். முழு விவரம் எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்.
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும். அதனை உடனடியாக அமல்படுத்தவும் வேண்டும் என்று குறிப்பிட்ட ரஜினியிடம், பணமதிப்பழிப்பு குறித்து கேள்வியை நிருபர்கள் எழுப்பினர். அதற்கு, பணமதிப்பழிப்பை அமல்படுத்திய விதம் தவறாக அமைந்துவிட்டது. இது விரிவாகப் பேச வேண்டிய விவகாரம் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, பாஜகவுக்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அப்படியென்றால் பாஜக ஆபத்தான கட்சியா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “அப்படியென்று அவர்கள் (எதிர்க்கட்சிகள்) நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கண்டிப்பாக அப்படித்தானே இருக்க முடியும்” என்று பதிலளித்தார்.
ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், சைக்கிள் பேரணி, அஞ்சல் அட்டை அனுப்புதல் என பல்வேறு விதமாகவும் ஆளுநருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினி இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.