'அவன் இவன்' விவகாரம்: பாலா ஆஜர்!

அவன் இவன் படம் குறித்துத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இயக்குநர் பால  (நவம்பர் 12) அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.ஆர்யா, விஷால் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான அவன் இவன் திரைப்படத்தை பாலா இயக்க, கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் உருவத்தையொத்த ஒரு கேரக்டர், இடம் பெற்றிருந்தது. அத்துடன் சிங்கம்பட்டி ஜமீனையும் சொறிமுத்து அய்யனாரையும் அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் வசனங்கள் இடம்பெற்றதாகப் புகார்கள் எழுந்தன.

இதனால் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அதில், “சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் பெயருக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் திட்டமிட்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் வழிபடக்கூடிய சொறிமுத்து அய்யனார் கோயிலையும் அவதூறாகச் சித்திரித்திருக்கிறார்கள். திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்ட இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, தனக்கும் படத்தின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் தெரிவித்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த ஜூன் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அதனால் அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால் அவர் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது. ஆனால், நடிகர் ஆர்யா ஆஜராகவில்லை. அதனால் அவர் வரும் 16ஆம் தேதி நடக்கும் அடுத்தகட்ட விசாரணைக்குக் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

Powered by Blogger.