மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கிடையே 56.58% வாக்குப்பதிவு!

சத்தீஸ்கரில் நடை பெற்ற முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலில், மாலை 4.30மணி நிலவரப்படி 56.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்ட சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகளில் மொத்தமாக 56.58 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில், காண்டகோனில் 61.47சதவிகித வாக்குப்பதிவு, கெஷ்கலில் 63.51சதவிகித வாக்குப்பதிவு, கன்கரில் 62 சதவிகிதம், பஸ்தாரில் 58 சதவிகிதம், தண்டேவாடாவில் 49சதவிகிதம், கெய்ர்ஹாகில் 60.5சதவிகிதம், டோங்கர்கர்கில் 64 சதவிகிதம், மற்றும் குஜ்ஜியில் 65.5சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே, வாக்குப்பதிவைச் சீர்குலைக்கும் விதமாக பிஜபூர் பாமெட் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினர் அதற்குப் பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 கோப்ரா படை வீரர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், “சத்தீஸ்கரில் பாஜக மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அக்கட்சி தில்லுமுல்லு செய்துள்ளதாக” காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் டிஎஸ் தேவ் சிங் தெரிவித்துள்ளார்.ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று காங்கிரசில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவர் கனரம் சகு, இன்று (நவம்பர் 12) பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.