விதிகளைப் பின்பற்றியே ரஃபேல் ஒப்பந்தம்: மத்திய அரசு!

2013ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறையின் கொள்முதல் நடைமுறைப்படி 36
ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கைக் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் போர் விமானத்தின் விலை, அதன் திறன் தொடர்பான விவரங்களை 10 நாட்களுக்குள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 12) உச்ச நீதிமன்றத்தில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ’36 ரஃபேல் போர் விமான கொள்முதலுக்கான முடிவின் நடைமுறை விவரங்கள்' என்ற தலைப்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ,2013ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறையின் கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட்டே, ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குழு ஒரு வருடத்துக்கும் மேலாக 74 முறை பிரான்ஸ் அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய பாதுகாப்புத் துறைக்கான, அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதலுடன் இரு நாடுகளுக்கு இடையே விமான கொள்முதலுக்கான கையெழுத்துப் போடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதாகவும், நவீன வசதிகளுடன், சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் மேம்படுத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த விபரங்கள் மனுதாரர்களிடம் இன்று (நவம்பர் 12) வழங்கப்பட்டது. எனினும் அந்த அறிக்கையில் ரஃபேல் போர் விமான விலை தொடர்பான விவரங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments

Powered by Blogger.