விஜய் பக்கா சூப்பர் ஹீரோ: வெங்கட் பிரபு


ட்விட்டரில் நடிகர் விஜய் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறிய பதில், சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

சமூக வலைதளங்களில் இயங்குவோர் ஏதேனும் டாப்பிக்கில் அவ்வப்போது சுவாரஸ்யமான கருத்துக்கணிப்பை போலிங் வைத்து நடத்துவது தற்போது ட்ரெண்டாக உள்ளது. அந்தவகையில் இணைய விமர்சகராக அறியப்படும் அபிஷேக் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமா கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினார்.
அதில், “குழந்தைளுக்கும் வயது வந்தோருக்கும் பிடித்த வகையில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் கொண்டு படம் தயாரானால் அதில் யார் நடித்தால் சிறப்பானதாக இருக்கும்?” எனும் கேள்வி கேட்டு கேள்விக்கான தெரிவுகளாக நடிகர்கள் விஜய், விக்ரம், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரின் பெயர்களைக் கொடுத்திருந்தார்.
இக்கேள்விக்கு பலரும் பலவிதமான பதில்களைத் தந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் இந்தக் களத்தில் குதித்தார். அந்தவகையில், “சூப்பர் ஹீரோவாக விஜய் நடித்தால் பக்காவாக இருக்கும்” என வெங்கட் பிரபு தெரிவித்தார். இந்நிலையில், “விஜய் மற்றும் அஜித்தை வைத்து தாங்கள் எடுக்கவுள்ளதாகக் கூறிய மல்ட்டி ஸ்டாரர் படம் என்ன ஆனது?” என அப்பதிவின் கமென்டில் ஒருவர் கேட்க “அதுக்கு அவங்க ஒத்துக்கணுமே” எனப் பதில் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபுவிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுவதொன்றும் முதன்முறையல்ல. பல தடவை இந்தக் கேள்வி கேட்கப்பட்டு இதே மாதிரியான பதிலையே தொடர்ந்து கூறிவருகிறார். போலவே மங்காத்தா- 2 குறித்த கேள்வி கேட்கப்பட்டாலும் "அதை அஜித்தான் சொல்லவேண்டும்" எனவும் கூறி, அவர் எஸ்கேப் ஆவதும் வாடிக்கையாக்கிவிட்டது.
சூப்பர் ஹீரோ கதைக் களத்தையொத்த வேலாயுதம், அட்வெஞ்சர் வகையையொத்த புலி போன்ற படங்களில் நடித்துள்ள விஜய்யை சூப்பர் ஹீரோ ரோலுக்குப் பொருத்தமானவர் என வெங்கட் பிரபு கூறியிருப்பதை பலரும் வரவேற்று ஷேர் செய்துவருகின்றனர். இணையத்திலும் அவரது இந்தப் பதிலானது ட்ரெண்டு ஆகியுள்ளது.

No comments

Powered by Blogger.