பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்!

சிவகாசியில் உள்ள 1,400 பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பட்டாசு வெடிப்பதற்கும் தயாரிப்பதற்கும் பல்வேறு கடுமையான
கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம். இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும், பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்குப் பாதிப்புகள் அதிகமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 12) சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கால வரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் மாரியப்பன் கூறுகையில், பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பசுமைப் பட்டாசு என்ற ஒன்றே கிடையாது என்றும் தெரிவித்தார். “இன்று (நவம்பர் 12) முதல் 1,400 ஆலைகள் மூடப்படுகின்றன. ஆலை மூடப்படுவதால் ஒரு கோடி பேர் வேலை இழக்க நேரிடும். அதனால், இங்குள்ள தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மாற்றி வழங்க வேண்டும். நல்ல தீர்ப்பு வரும் வரை காத்திருக்க இருக்கிறோம்” என்று மாரியப்பன் கூறினார்.
வழக்கமாகவே தீபாவளியை அடுத்து, பட்டாசு ஆலைகள் குறைந்தபட்சம் இரண்டு மாத காலத்துக்கு மூடப்படும். அதன்பின்னர், பொங்கல் பண்டிகையை அடுத்துதான் பட்டாசு ஆலைகள் இயங்கும். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம், மறுதீர்ப்பு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.