ட்விட்டர் சிஇஓ - ராகுல் சந்திப்பு!

உலகின் மிகப் பெரிய சமூக தளங்களில் ஒன்றான ட்விட்டர் தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்சி இன்று (நவம்பர் 12) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
முதல்முறையாக கடந்த வாரம் இந்தியா வந்த ஜாக் டார்சி திபெத் புத்த துறவி தலாய் லாமா உள்ளிட்ட பலரையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தபோது, ‘ட்விட்டர் தளத்தில் போலி செய்திகள் அதிகம் பகிரப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்று ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளார் ராகுல் காந்தி.
இந்த சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “ட்விட்டர் தளம் உலகில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொது உரையாடல் தளமாக உள்ளது. இத்தகைய மாபெரும் தளத்தில் போலிச் செய்திகள் குறிப்பாக இந்தியாவில் பரப்பப்படும் நிலையில், ஜாக் என்னிடம் ட்விட்டரில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், ஆரோக்கியமான உரையாடல்கள் நடக்கவும் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில் போலிச் செய்திகளின் ஆதிக்கம் கணிசமாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரியிடம் ராகுல் முறையிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே அவர் ராகுல் காந்தியிடம் விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும் ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்சி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்தித்துப் பேச இருக்கிறார்.

No comments

Powered by Blogger.