மிக்ஸி, கிரைண்டர் பெற்றுத் தந்த வெற்றியா?

சர்கார் படத்தை மையமாக வைத்து எழுந்த சர்ச்சைகள் ஒருவழியாக ஓய்ந்தன. ஆனால், சர்ச்சைகள் தொடர்வதையே படக்குழு விரும்புகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் சர்கார். படம் தொடர்ந்து சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில் படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததாக புதிய சர்ச்சை கிளம்பியது. அதிமுகவினர் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்னால் போராட்டம் நடத்தினர். சர்கார் படத்தின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. எதிர்ப்பின் காரணமாக படக்குழுவினர் மிக்ஸி, கிரைண்டர்களைத் தீயிலிட்டு எரிக்கும் காட்சியை நீக்கினர். மறுதணிக்கை செய்யப்பட்டு வெள்ளி முதல் திரையிடப்பட்டது. இருப்பினும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் படத்திற்கான விளம்பரமாக மாறிப் படம் வசூல் சாதனை படைத்தது.

 
இந்நிலையில் படக்குழுவினர் நேற்று சென்னையில் படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடினர். இதில் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட கேக்கிலும் சர்கார் படத்தின் சர்ச்சை நினைவுபடுத்தப்பட்டிருந்தது. அதன்படி, கேக்கில் சர்கார் படத்தின் போஸ்டரோடு மிக்ஸி, கிரைண்டர் ஆகிய உருவங்களும் சிறிய அளவில் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருந்தன.

நிகழ்வு குறித்த புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற அது சமூகவலைதளங்களில் விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. மிக்ஸி, கிரைண்டரால் படம் வெற்றி பெற்றதானால் அதை வெற்றிக் கொண்டாட்டத்தில் நினைவுகூர்கிறீர்களா என்று ரசிகர்கள் அவரது பதிவுக்கு கமெண்ட் செய்துவருகின்றனர்.

No comments

Powered by Blogger.