இந்தியன் 2: இன்று தொடக்கம்!

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் முக்கிய பணிகள் இன்று (நவம்பர் 12) பூஜையுடன் தொடங்கியுள்ளன.


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.O படம் இந்த மாதம் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. நான்கு வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. லைக்கா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பக் குழு பணியாற்றியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர், லைக்கா நிறுவனம் மீண்டும் இணையும் படம் இந்தியன் 2. கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பும் கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் கமல் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் ஷங்கர் 2.O பணியில் கவனம் செலுத்திவந்ததாலும், படத்தின் பணிகள் மெதுவாக நடைபெற்றுவந்தன. இந்நிலையில் கமலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக லைக்கா நிறுவனம் ‘இந்தியன் 2 விரைவில்’ என்று முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பதிவிட்டிருந்தது. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் இன்று படத்திற்கான அரங்கு அமைக்கும் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. கலை இயக்குநர் முத்துராஜ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2.O படத்திற்கும் முத்துராஜே கலை இயக்கப் பணிகளை மேற்கொண்டிருந்தார். எந்த பாணியிலான கதையாக இருந்தாலும் அதற்கேற்ற அரங்குகளைத் தத்ரூபமாக அமைப்பதில் தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குநராகப் பயணித்து வருகிறார் முத்துராஜ். வேலைக்காரன் படத்திற்காக சென்னையின் கூவம் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள குடிசைகள் அடங்கிய பகுதியை 7.5 ஏக்கர் பரப்பளவில் தத்ரூபமாக உருவாக்கியிருந்தார். படம் வெளியான பின் அந்த அரங்கு பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. 2.O படத்தை பொறுத்தவரை முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த பொருள்களை அவர் உருவாக்கியுள்ளார். தற்போது இவரது குழுவினர் இந்தியன் 2 படத்தின் பணிகளை தொடங்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.