மத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்!

 புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த மத்திய அமைச்சர் அனந்த குமார், பெங்களூருவில் இன்று அதிகாலை உயிரிழந்தார், அவருக்கு வயது 59.


மத்திய உரம், ரசாயனம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தவர் அனந்த குமார். பாஜகவின் மூத்த தலைவரான இவர், கடந்த சில காலங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நியூயார்க்கில் சிகிச்சை பெற்ற அனந்த குமார், கடந்த மாதம் இந்தியா திரும்பினார். தொடர்ந்து பெங்களூருவிலுள்ள சங்கரா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இன்று (நவம்பர் 12) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெங்களூருவிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனந்த குமார் உடலுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் நேஷனல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அனந்த குமாரின் மறைவையடுத்து, கர்நாடக அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1959ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி பிறந்த அனந்த குமார், எல்எல்பி சட்டப்படிப்பை முடித்துள்ளார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1987இல் பாஜகவில் இணைந்தார். அவசரநிலை கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்துப் போராடியதற்காக 1985ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாஜகவின் தேசிய செயலாளராகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2003ஆம் ஆண்டு இவர் கர்நாடக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அனந்த குமாருக்கு தேஜஸ்வி என்னும் மனைவியும், ஐஸ்வர்யா, விஜிதா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

1996ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனந்த குமார், தொடர்ந்து ஆறு முறை அத்தொகுதியிலிருந்து எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். வாஜ்பாய், நரேந்திர மோடி அமைச்சரவையில் பணியாற்றிய சிலரில் இவரும் ஒருவராவார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்


அனந்த குமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மூத்த பாராளுமன்றவாதியும் மத்திய அமைச்சருமான அனந்த குமார் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “என்னுடைய அமைச்சரவையில் இடம் பெற்ற மதிப்புக்குரியவரும், சிறந்த நண்பருமான அனந்த குமார் மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மிகவும் குறிப்பிடத்தக்க தலைவரான அனந்த் குமார், சிறுவயதிலேயே பொது வாழ்க்கைக்கு வந்து, சமூகத்துக்கு அர்ப்பணிப்புடன், இரக்க உணர்வுடன் சேவை செய்தவர். அவரின் நற்பணிகள், சேவைகள் எப்போதும் நினைவில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கலில், “அனந்தகுமார் இளம் வயதில் சமூக பணியாற்ற ஆர்வம்கொண்டு அரசியலுக்கு வந்தவர். 1996 முதல் 2014 வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர்.அனந்தகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அனந்த குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.