ராஜலட்சுமி கொலை: குரல் கொடுக்காத அரசு!

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்திற்குக் குரல் கொடுக்கும் மாநில அரசு, ராஜலட்சுமி கொலைக்குக் குரல் கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி.
நேற்று (நவம்பர் 11), கோவை மாநகராட்சி கலை அரங்கத்தில் சமூக நீதிக் கட்சி சார்பாக விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்குத் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ஜிக்னேஷ் மேவானி. "பெரியார் விருது எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனது செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்கும். தமிழக மக்கள் பெரியாரைப் போற்றுகின்றனர். பெரியார் மண்ணான தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தமிழகம் இயங்குவதாகத் தெரிவித்தார். “ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காக்கிறார். மதச்சார்பற்ற மாநிலங்களை இந்துத்துவ மாநிலமாக மாற்ற, மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் சாதி ரீதியான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன.
இங்குள்ள நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, தலித் சமூகத்தைச் சேர்ந்த 10 முதல் 12 இளம்பெண்கள் பாலியல் தொந்தரவு மற்றும் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில், சமீபத்திய நிகழ்வு சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை. இது மிகவும் கொடூரமானது. இந்த சம்பவம் குறித்துப் பேசாமல் மெளனமாக இருக்கிறார் பிரதமர் மோடி. ஒரு நாய் இறந்தால் ட்வீட் போடும் பிரதமர் மோடி, சிறுமி ராஜலட்சுமி கொலைக்கு மெளனம் காப்பது ஏன்? சர்கார் படத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தமிழக அரசு, ராஜலட்சுமி படுகொலைக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை?
தீண்டாமை மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜலட்சுமி கொலை வழக்குக்கு நீதி கேட்டு, 20 மாநிலங்களில் இருந்து 500 அமைப்புகளைத் திரட்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகத்தில் பெரும் மாநாடு நடத்தப்படும்" என்று ஜிக்னேஷ் மேவானி தன் பேச்சில் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.