புயல் பாதித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவு நிவாரணம்- அமைச்சர் செல்லூர் ராஜூ!

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வரலாறு காணாத அளவிற்கு  இழப்பீட்டு தொகை அறிவித்துள்ளது, விரைவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.


மதுரை கோச்சடை பகுதியில் கஜா புயலின் காரணமாக மரங்கள் சாய்ந்து இடங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “கஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வாழ்த்தியுள்ளது ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது. இதே நிலை தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். குறை உள்ள போது அதனை சுட்டிக்காட்டுவதும், சிறந்த பணி மேற்கொள்ளும் போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் வகையில் உள்ளது. அவர் மட்டுமல்ல தமிழக அரசின் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தமிழக மக்களும், ஊடகங்களும் பாராட்டுகின்றனர்

நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் உதவியை நாடுவார். கஜா புயலை எதிர்கொள்வதில் மாநில அரசும் மத்திய அரசும் இணக்கமாகச் செயல்படுகிறது.மதுரை மாவட்டத்தில் கஜாபுயலில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கொட்டாம்பட்டி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இரவு, பகல் என பாராமல் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், கஜா புயல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டனர். கஜா புயல் தொடர்பாக மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய நிட்சயம் செவி சாய்க்கும் என நம்பிக்கை உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் இழப்பீட்டு தொகை அறிவித்துள்ளார், விரைவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.