"இவர்கள் இவ்வளவு கேவலமாக, நடந்து கொள்கிறார்களே.."

''எனது ஆச்சி தீவிர மஹிந்த ஆதரவாளர்.இன்று (16) பாராளுமன்றத்தில் நடந்த சம்பவங்களைப் பார்த்துவிட்டுக் கூறினார்."புத்தே,இவர்கள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்களே அதைப் பார்த்துக் கொண்டு மஹிந்த மாத்தையா சும்மாதானே இருக்கிறார்.இப்படிப் போனால் பொஹொட்டுவைக்கும் இருக்கும் ஆதரவு இல்லாமல் போய்விடும்"


நேற்றைய பாராளுமன்ற சம்பவங்களைத் தொடர்ந்து டுவிற்றரில் ஒரு சிங்களவர் பதிந்த செய்தி இது.

பெரும்பாலான சிங்கள சமுகத்தினர் மெதுமெதுவாக மஹிந்த சம்பந்தமான தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாராளுமன்றம் முடிந்த கையோடு தனது முகநூலில் 'இன்று நடந்து அனைத்து விடயங்களுக்கும் காரணம் சபாநாயகரின் கட்சி பேத நடவடிக்கைதான்.பொதுத் தேர்தலை நடத்தி ஸ்திரமான பாராளுமன்றைத்தை அமைப்போம்'' என்று  ராஜபஷ எழுதியிருந்தார்.

எதை நோக்கி இவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள் என்பது புரிகிறது.அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கும் சம்பவங்களையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் இவர்கள் ஓட்ட நினைக்கும் படம் தெரியும்.

நேற்றைய அமளி துமளிக்குள் ஒரு முக்கியமான சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.அதற்கு பலர் பெறுமதி கொடுக்க தயங்கிவிட்டார்கள்.அதுதான் மஹிந்த அணியின் உறுப்பினரும் இன்னும் சிலரும் நேன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு சமர்ப்பித்திருந்தார்கள்.பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அல்லாமல் 5 அல்லது 7 பேர் கொண்ட நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்குமாறு அந்த மனு கோரியிருந்தது.இது முதலாவது தொடர்பறுந்த சம்பவம்.

மஹிந்த ராஜபஷ்சவை பிரதமராக்கியதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கும் பேச்சு வரவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் மஹிந்த தரப்புக் கூட ஜனாதிபதி பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்கு முன்னர் கலைக்கமுடியாது என்று பல சந்தர்ப்பங்களில் சொல்லிக் கொண்டு வந்தார்கள். திடீரென பாராளுமன்றத்தேர்தலை நடாத்துங்கள் என்ற கோஷம் முளைத்தது.மஹிந்த அணியினரின் ஊடக பேட்டிகளை கூர்மையாக அவதானித்தால் ஒவ்வொருவரும் பொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார்கள்.பொதுத் தேர்தல் தேவை என்ற பாணியில் முகனூலில் மஹிந்தவின் அடிவருடிகள் பலர் எழுத ஆரம்பித்தார்கள்.இது தொடர்பறுந்த இரண்டாவது சம்பவம்.

இதுவரைக்கும் இரண்டு தடவை நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றியாயிற்று.முதலாவதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.நேற்று நடை பெற்றதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியதாக செய்திகள் வருகின்றன.அதற்கு ஜனாதிபதி சொல்லும் காரணம் சரியான முறைப்படி அது நிறைவேற்றப்படவில்லை.சட்டம் தெரிந்தவர்களுக்குத் தெரியும் இது நிறைவேற்றப்பட்டது சரியான முறையில்தான் என்று. நிலையியற்கட்டளைகளின் 35ம் சரத்திற்கேற்ப பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு குரல் வாக்குகள் மூலம் அவை நிறைவேற்றப்பட்டன.
தெட்டத் தெளிவாக தெரிந்த பின்னரும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்.இது தொடர்பறுந்த மூன்றாவது சம்பவம்.

பாராளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடப்பதைத் தடுப்பதற்கு மஹிந்த அணி பகிரதப் பிரயத்தனம் எடுக்கிறார்கள்.14ம் திகதி தடுத்தார்கள்.15ம் திகதி மஹிந்தவின் பேச்சுக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற ல்க்ஷ்மன் கிரியெல்ல எழுந்த போது குப்பைக் கூடையால் சபாயாநகருக்கு எறிந்து தடுத்தார்கள்.நேற்று சபாயகரைக் கதிரைக்கே வராமல் தடுத்தார்கள்.அப்படிக் குழுமியிருப்பவர்களின் காதுகளுக்குள் நாமல் ராஜபக்ஷ போய் ஏதோ குசுகுசுத்துவிட்டு வருகிறார்.இது நான்காவது சம்பவம்.

இவைகள் எல்லாவற்றையும் ஒரு நேர் கோட்டின் இழுத்துவைத்துப் பார்த்தால் மஹிந்த தரப்பின் திட்டம் தெரிகிறது.

26ம் திகதி நடாத்தப்பட்ட முழு நாடகமும் ஒரு நம்பிக்கையின் பெயரில்தான்.'எம்மால் பெரும்பான்மை காட்ட முடியும்'. ஆகவே மஹிந்தவை பிரதமாராக்குவது. பெரும்பான்மை காட்டுவது.ஆனால் அந்தத் திட்டம் அதோ கதியாகிவிட்டது.

இந்த அவமானத்திலிருந்து வெட்கத்திலிருந்தும் சுதாரித்துக் கொள்ள அவர்கள் போட்ட ''PLAN B'' பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துவது.அதைத் தவிர இந்த அவமானத்திற்கு தீர்வில்லை.நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு அவர்களின் திட்டம் மீது இடியைப் போட்டுவிட்டது.

இப்பொழுது அவர்களது திட்டம் நீதிமன்றத் தீர்ப்பு டிசம்பர் 7ம் திகதியளவில் வரும் வரைக்கும் மஹிந்தவின் பிரதமர் பதவியோடு பாராளுமன்றைத்தை  இழுத்துக் கொண்டு செல்வது. அதற்கு இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன.

அதுவரைக்கும்,

01.பாராளுமன்ற கூட்டத் தொடரை தொந்தரவு செய்வது.

02.அதையும் தாண்டி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் ஜனாதிபதியை வைத்து நிராகரிக்கச் செய்வது.

03.அடாவடித் தனங்களுக்கு சபாநாயகரைக் காரணம் காட்டுவது.

04.எப்படியாவது முறையான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு அவர்களை இணங்க வைத்துவிட்டால் நாட்கள் ஓடிவிடும்.தீர்ப்பு நாளும் வந்துவிடும்.

05.அதையும் தாண்டி அவர்கள் நடாத்திக் காட்டினால் ரணிலை நியமிக்க முடியாது என்று இழுத்தடிப்பது.

06.அதே நேரம் தேர்தல் தேவை என்று மக்களை விட்டு கோஷம் செய்ய வைப்பது.பாரிய பேரணிகளை அமைப்பது.

07.பாராளுமன்றத்தில் கடுமையான தாக்குதலை மேற்கொள்வது.

08.நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது.அதிகரித்தால் மஹிந்தவின் ஆதரவாளர்கள் சிலர் அதில் இருக்கலாம்.

09.தொடர்ந்து பாராளுமன்றைத்தை வைத்திருந்தால் அடிதடி வரும்,மக்களுக்கு தேர்தல் தேவை என்று வாதங்களை வழக்கில் முன்வைப்பது.

10.நீதிபதிகளை  மிரட்டியாவது பாராளுமன்றத்தைக் கலைத்துவிடுவது.

இந்தத் திட்டத்தை நோக்கித்தான் இது சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் அவர்களது திட்டம் பிழைத்துவிடும்.எப்படித் தெரியுமா.முதல் பந்தியில் ஆச்சி சொன்ன காரணம்தான்.

''புத்தே,இவர்கள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்களே அதைப் பார்த்துக் கொண்டு மஹிந்த மாத்தையா சும்மாதானே இருக்கிறார்.இப்படிப் போனால் பொஹொட்டுவைக்கும் இருக்கும் ஆதரவு இல்லாமல் போய்விடும்" 
Powered by Blogger.