’ஓட்டை’க் கப்பலில் தத்தளிக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள்.. !

கால்வாசி வாக்குச்சாவடிகளுக்கு கூட பூத் ஏஜெண்டுகளை நியமிக்க முடியாமல் இப்போதைய தலைமை அ.தி.மு.க திணறி வருகிறது. தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.கவுக்கு  பூகம்பம் பூத் ஏஜென்ட் வடிவில் வந்து விட்டது.


தமிழ்நாட்டில் அறுபதாயிரம் வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு, கட்சி சார்பில் பூத் ஏஜெண்டுகளை நியமிக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்த கட்சிகள் தி.மு.கவும், அ.தி.மு.கவும்தான். இதுவரையிலான தேர்தல்களில் இந்த இரண்டு கட்சிகளால் மட்டுமே அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க முடிந்துள்ளது. ஒவ்வொரு பூத்திலும் மேற்கொள்ளப்பட்டு வந்த அ.தி.மு.கவினரின் தேர்தல் வேலைகள் அதிர வைக்கும். அதெல்லாம் ஜெயலலிதா காலத்தில்... ஓ.பிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான இப்போது பூத் ஏஜெண்டுகளை நியமிக்க முடியாமல் அ.தி.மு.கவே அதிர்ந்து கிடக்கிறது.

நாடாளுமன்றம் மற்றும் 20 சட்டமன்றங்களுக்கான இடைத்தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை பூத் ஏஜென்ட்டுகளாக நம்பிக்கை உள்ளவர்களையே போடவேண்டும். அவர்கள் விலைபோகக் கூடாது என்று அ.தி.மு.கவில் ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், யாரை நியமித்தாலும் அவர்களைக் கண்காணிக்க இன்னொருத்தரை போட வேண்டும். அவர்களும் நம்பிக்கைக்கு உரிய நபராக இருக்க வேண்டும். மக்கள் செல்வாக்கு உள்ள முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என அ.தி.மு.க திட்டமிட்டு வருகிறது.
ஆனால் இதுவரை கால்வாசி கூட பூத் ஏஜென்ட் பணிகளைக் கூட முடிக்க இயலாமல் திணறி வருகிறது. ஒன்றரைக்கோடி தொண்டர்களைக் கொண்டிருந்த அ.தி.மு.கவுக்கு தேர்தலுக்கு முன்பே பூகம்பம் பூத் ஏஜென்ட் வடிவில் வந்து விட்டது. பூத் ஏஜெண்டுகள் சரியாக இருந்தால் ஓட்டுகள் சிதறாது என்பதில் அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக இருப்பதால், முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் கதையாகிக் கிடக்கிறது அ.தி.மு.கவின் நிலை!
Powered by Blogger.