"தமிழ் சமூக மனசாட்சியை தட்டி எழுப்ப இன்னும் எத்தனை படுகொலைகள் நடக்க வேண்டும்?" - பா. ரஞ்சித்

தமிழ் சமூகம் சாதிய சமூகமாக உள்ளது என்பதை இந்த சம்பவம் மீண்டும் காட்டுவதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் நந்தீஷ் - சுவாதி கொலைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசி உள்ளார்.



"காவிரி, ஜல்லிக்கட்டு என்றால் தமிழர்கள் ஒன்றிணைகிறார்கள். பட்டியல் சமூக மக்கள் தள்ளி நிற்பதில்லை. அவர்களும் தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு போராடுகிறார்கள். ஆனால், சாதி ரீதியாக பட்டியலின மக்கள் கொல்லப்படும்போது மற்றவர்கள் மெளனம் காப்பது ஏன்" என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்புகிறார்.

தமிழ் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப இன்னும் இது போன்று எத்தனை படுகொலைகள் நடக்க வேண்டும் என்று வினவி உள்ளார்.சாதி இந்து பெண்ணை காதல் திருமணம் செய்ததால் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து தம்பதியை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவாகியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடகொண்டபள்ளி, வெங்டேஷபுரம் எனும் கிராமத்தைச் சார்ந்த நாராயணப்பா மகன் நந்தீஷ். 25 வயதான இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

நந்தீஷ் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுவாதி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் ,வெவ்வேறு சாதியை சேர்ந்த இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி சூளகிரியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரைவிட சாதியை பெரிதாகப் பார்க்கிறதா சமூகம்?
சாதி இந்துவான சுவாதியும், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் நந்தீஷ் இருவரின் திருமணத்திற்க்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்ட இத்தம்பதி, கடந்த தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், 11.11.2018 முதல் நந்தீஷை காணவில்லை என்று நவம்பர் 14 அன்று அவரது சகோதரர் ஓசூர் நகரக் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதே நாளில் சுவாதியின் குடும்பத்தினரும், அவரைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

தற்போது நந்தீஷ், சுவாதி இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பிறகு, மாண்டியா மாவட்டக் காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

தொடர் விசாரணையில் இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின், அவர்கள் கை, கால்களை கட்டி உடல்களை காவிரி ஆற்றில் வீசியதாகத் தெரியவந்துள்ளது.
அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஒசூர் அருகே உள்ள புணுக்கன் தொட்டியைச் சார்ந்த ஒருவர் மூலம் சுவாதியின் பெற்றோர்கள் இக்கொலையை நடத்தியிருக்கிறார்கள் என்றும் போலீசார் கூறுகின்றனர். கிருஷ்ணகிரி காவல்துறையினர் சுவாதியின் தந்தை சீனிவாசன் சித்தப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்ததுடன், மேலும் நான்கு பேரை தேடி வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.