சென்னையில் புதிய ஆலை

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சமையல் உபகரணங்களைத் தயாரிக்க உற்பத்தி ஆலையைச் சென்னையில் துவங்கியிருக்கிறது பிரீத்தி நிறுவனம்.மிக்சி, கிரைண்டர் விற்பனையின் மூலம் தென்னிந்தியாவில் வலுவாகக் கால்பதித்து, தங்களின் சிறப்பான சேவையால் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ். தற்போது மிக்சி, கிரைண்டர் பிரிவில் 20 சதவிகித சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் இந்நிறுவனம் வைத்திருக்கிறது. பிலிப்ஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனமான பிரீத்தி தனது உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது.

பிரீத்தியின் நாற்பதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு "மேக் இன் இந்தியா" திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் புதிய தொழில்நுட்பங்களை கொண்ட அதிநவீன முறையிலான உற்பத்தி ஆலையைச் சென்னையை அடுத்து தையூரில் அமைத்துள்ளது. இங்கு மிக்சி மற்றும் கிரைண்டர் உற்பத்தி செய்யப்பட்டு, ஒருங்கிணைப்பு வேலைகளையும் மேற்கொள்ள இருக்கிறது.

உயர்தர தொழில்நுட்பத்தின் மூலம் பொருட்களின் தரத்தை உயர்த்தியும், செயல் திறனை அதிகப்படுத்தியும் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், இந்த ஆலையின் உதவியுடன் வருடத்திற்குப் பன்னிரண்டு லட்சம் மிக்சி, கிரைண்டர்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மிக்ஸி, டேபிள் டாப் கிரைண்டர், எலெக்ட்ரிக் குக்கர், அடுப்புகள், காபி மேக்கர் போன்றவை இந்தியா மட்டுமின்றி 14 நாடுகளின் வாடிக்கையாளர்களால் நுகரப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நாடு முழுவதும் பத்தாயிரம் விற்பனையாளர்கள், நூறு விநியோகர்கள் மற்றும் 96 பழுதுபார்க்கும் மையங்களைக் கொண்டு பிரீத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.   

No comments

Powered by Blogger.