பாலியல் குற்றங்கள் : முதல்வரின் சர்ச்சை பேச்சு!


பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது தொடர்பாக ஹரியானா முதல்வர் பேசிய வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாக மிடூ இயக்கத்தின் மூலம், அமைச்சர்கள், திரையுலகினர் என பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர்.

பாஜக ஆட்சி செய்யும் ஹரியானாவில், அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அந்தப் பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”80 முதல் 90 சதவிகித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் பரிட்சயமான இருவருக்கு இடையில் தான் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் பல நாட்கள் ஒன்றாக இருந்துவிட்டு இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்படும் போது அந்தப் பெண் பலாத்கார வழக்குப் பதிவு செய்வார். இதனால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன” என்று ஹரியானா முதல்வர் பேசியுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நீண்ட நெடுங்காலமாக நடைபெறுவதால் தற்போதும் தொடர்கிறது” என்று அந்த வீடியோவில் மனோகர் லால் கட்டார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ”ஒரு மாநில முதல்வரே இவ்வாறு வல்லுறவுகள் குறித்து சிந்திக்கிறார் என்றால். அந்த மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் இதனால் தான் அம்மாநிலத்தில் தொடர்ந்து பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களும் சுதந்திரமாக சுற்றுகின்றனர்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு, பல தரப்பினரும் ஹரியானா முதல்வர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தான் பேசியது தொடர்பாக விளக்கமளித்துள்ள மனோகர் லால் கட்டார், ”இது விசாரணைகளிலிருந்து எழும் ஒரு உண்மை. சமூக மட்டத்தில் இருந்து தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம். அதைவிடுத்து அரசியலாகப் பார்க்கப்படக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜெவாலா, ”ஹரியானா அரசின், பெண்களுக்கு எதிரான மனப்பான்மை வெளிப்பட்டுள்ளது. மனோகர் லால் கட்டார் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.