இந்திரா காந்தி படுகொலையும் சீக்கியர் 'இனப்படுகொலையும்'!

136 ராணுவத்தினர் வீரமரணம்( 700 பேர் பலி எனவும் கூறப்பட்டது)...


200 ராணுவ வீரர்கள் படுகாயம்...

492 பொதுமக்கள் பலி...

காலிஸ்தான் தனிநாடு கோரிய பஞ்சாப் தீவிரவாதிகள் 5,000 பேர் பலி

- 34 ஆண்டுகளுக்கு முன்னர் 1984ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் நுழைந்து ராணுவம் நடத்திய ஆபரேஷன் 'ப்ளூஸ்டாரின்’ ரத்த சரிதம் இது.

இதன் விளைவை இந்திய தேசம் 4 மாதங்களிலேயே எதிர்கொண்டது. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி இதே நாளில் சீக்கிய பாதுகாவலர்கள் பியாந்த் சிங், சத்வத் சிங் ஆகியோரால் ப்ளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்ட பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இத்துடன் முடிந்து போய்விடவில்லை இந்த துயரம்... சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா அம்மையார் படுகொலை செய்யப்பட்டார் என்கிற சேதி காட்டுத் தீ போல பரவ இந்த கோபத் தீயில் கருகி மாண்டனர் பல நூறு சீக்கிய அப்பாவி மக்கள்.

டெல்லி தெருக்களில் கண்ணில்பட்ட பல்லாயிரம் சீக்கியர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டனர். அப்போதுதான் ராஜீவ்காந்தி, “ஒரு ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்” என்கிற தத்துவத்தைப் பேசினார்.

வரலாற்றின் பக்கங்களில் சீக்கியர் இனப்படுகொலை என இடம்பிடித்துப் போனது இச்சம்பவம். இது குறித்த வழக்குகள் இன்னமும் முடிந்தபாடில்லை.. அப்பப்பா எத்தனை எத்தனை கமிஷன்கள்? எத்தனை எத்தனை வழக்குகள்?

இந்திரா காந்தி அம்மையாரை படுகொலை செய்த பியாந்த் சந்த் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சத்வசிங், பியாந்த்சிங்கின் உறவினர் கேகர் சிங் இருவரும் டெல்லி மத்திய சிறையில் 1989ஆம் ஆண்டு 6ஆம் தேதி அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர். இருவரது உடலுமே டெல்லி சிறையிலேயே எரியூட்டப்பட்டது.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்

இந்திரா படுகொலைக்கும் சீக்கியர் இனப்படுகொலைக்கும் காரணமான ஆபரஷேன் ப்ளூஸ்டாரின் பின்னனி இதுதான்.

சீக்கியர்கள் எனும் தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை உண்டு; இதனடிப்படையில் பஞ்சாப் உள்ளிட்ட சீக்கியர்கள் வாழும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து “காலிஸ்தான்” என்கிற தனிநாடு உருவாக்கப்பட வேண்டும்; இதற்காக உருவாக்கப்பட்டதுதான் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் விடுதலை இயக்கம் எனும் ஆயுதம் தாங்கிய அமைப்பு.

பிந்தரன்வாலேயின் காலிஸ்தான் விடுதலை அமைப்புக்கு புகலிடமாக இருந்தது சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவில். 1980களின் தொடக்கத்தில் ‘பஞ்சாப் பற்றி எரிகிறது’ என்பதுதான் நாளிதழ்களின் தலைப்பு செய்திகள்.

அந்த அளவுக்கு இந்திய அரசுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியை உக்கிரமாக நடத்தியது காலிஸ்தான் விடுதலை இயக்கம். இதனால் காலிஸ்தான் இயக்கத்தையும் பிந்தரன்வாலேவையும் அழித்தொழிக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளானார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

இதன்விளைவாக உருவானதுதான் ஆபரேஷன் ப்ளூஸ்டார். பொற்கோவிலுக்குள் நுழைந்து ராணுவ நடவடிக்கை மூலம் பிந்தரன்வாலே உள்ளிட்டோரை அழித்தொழிப்பதுதான் ஆபரேஷன் ப்ளூஸ்டார்.

ஆபரேஷன் ப்ளூஸ்டார் முழு வீச்சில் நடைபெற்றது 1984ஆம் ஆண்டு ஜூன் 6. ஆனால் அதற்கு முன்னரே 1984 மே 25ஆம் தேதியே பஞ்சாப் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

பின்னர் 1984 ஜூன் 1ஆம் தேதி முதல் மெதுமெதுவாக ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை தொடங்கியது. அதாவது பொற்கோவிலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நாளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதன் உச்சகட்டமாகத்தான் 1984 ஜூன் 6ல் பிந்தரன்வாலே உள்ளிட்டோர் பொற்கோவிலுக்குள்ளேயே கொல்லப்பட்டனர். ஜூன் 10ஆம் தேதி வரை இந்த ராணுவ நடவடிக்கை நீடித்தது.

தங்களது புனிதத் தலத்துக்குள் நுழைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதை இனத்தை அவமதிக்கும் செயலாக சீக்கியர்கள் கருதினர். இதன் விளைவுதான் அடுத்த 4 மாதங்களிலேயே இந்தியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட இந்திரா காந்தி அம்மையார் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெருந்துயரத்தை இந்திய தேசம் எதிர்கொண்டது!

- மா.ச. மதிவாணன்

No comments

Powered by Blogger.