பரிசை அறிவித்த ‘தென் ஆப்பிரிக்க ஐபிஎல்’!

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல்போல தென் ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள ம்ஸான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் கொடுக்கப்படவுள்ள பரிசுத் தொகை குறித்த விபரம் வெளியாகியுள்ளது.


ஐபிஎல் எனும் இந்தியன் பிரீமியர் லீக் போல தற்போது தென் ஆப்பிரிக்காவிலும் ம்ஸான்சி சூப்பர் லீக் எனும் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்துகொண்டு வானவேடிக்கை காட்டவுள்ளனர். குறிப்பாக சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஏபி டி வில்லியர்ஸ் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பது போட்டிக்கு புதிய வண்ணத்தைக் கொடுத்துள்ளது. அதுபோல மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் கெயிலும் இதில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் இந்தத் தொடரில் வழங்கப்படவுள்ள பரிசுத் தொகை குறித்த விபரம் ‘கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா’ (CSA) தரப்பிலிருந்து நேற்று (அக்டோபர் 30) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடரின் சாம்பியன் பட்டம் பெறும் அணியானது சுமார் 3.5 கோடி ரூபாயை பரிசாகப் பெறும். இரண்டாவது பரிசு ரூ. 1.25 கோடியாகும்.

தொடர் நாயகனுக்கு சுமார் ரூ.25 லட்சம் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதாக சுமார் ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது.தென் ஆப்பிரிக்கா சார்பாக பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டாலும் பிற ஸ்பான்ஸர் பற்றிய விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அதே நேரம் வரும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம். தற்போது நடக்கவுள்ள இந்த ம்ஸான்சி சூப்பர் லீக்கை தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பட்சத்தில் ஐபிஎல்லுக்காக வெளிநாடு தேடும் இந்தியாவின் பார்வை தென் ஆப்பிரிக்காவின் மேல் பட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல்லின் இரண்டாவது சீஸன் நடந்துள்ளதால் மீண்டும் தென் ஆப்பிரிக்காவிலேயே இந்த முறையும் ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த கூடுதல் வாய்ப்பாக இது அமையும்.

No comments

Powered by Blogger.