தேசிய ரீதியில் தமிழ் தினப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய மாணவி பா.குமுதினி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் திருமதி கே.நந்தபாலன் அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக தேசிய ரீதியில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் தமிழ் தினப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பிரதான மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் பூந்தோட்டம் மகாவித்தியாலய வரலாற்றில் முதன் முதலாக ஓரு போட்டியில் மாணவி பங்கு பற்றியமை இதுவே முதல் தடவையாகும். அந்த வகையில் தேசிய தமிழ் தினப் போட்டியின் பிரிவு நான்கில் சிறுகதைப் போட்டியில் பங்குபற்றிய பா.குமுதினி முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றி பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவியின் சாதனையை இதன் போது வாழ்த்தி பலரும் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் கோட்ட கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, வவுனியா கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ஐங்கரன், பழைய மாணவர் சங்க தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அகில இலங்கை ரீதியான தமிழ் தினப் போட்டி கடந்த சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.