தீபாவளி ரேஸிலிருந்து விலகிய ‘திமிரு புடிச்சவன்’!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் திமிரு புடிச்சவன். இப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய் ஆண்டனி நடித்த படங்கள் வரிசையாகத் தோல்வியை தழுவின. இதனால் தற்போது நடித்துள்ள திமிரு புடிச்சவன் படத்தை பெரிதும் நம்புகிறார். கணேசா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சர்கார் படம் அதிக தியேட்டரில் வெளியாவதால் திமிரு புடிச்சவனுக்கு போதிய தியேட்டர் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டாலும், படத்தின் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் விநியோகஸ்தர் தரப்பில் ஏற்பட்ட சிக்கலே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

மேலும், விஜய் ஆண்டனியை அறிமுகப்படுத்தியது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர். அதனைத் தொடர்ந்து பல விஜய் படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார் விஜய் ஆண்டனி. சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீடு கூட, விஜய் ஆண்டனி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு திரைத்துறைத் தாண்டி இணக்கமாக இருவரும் இருக்கும் வேலையில் எதற்காக ஒரே நாளில் இருவரும் படங்களை வெளியிட்டு போட்டி ஏற்படுத்துவது என எஸ்.ஏ.சி தரப்பு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் திமிரு புடிச்சவன் படத்தை நவம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். எனவே தீபாவளி அன்று சர்கார், பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்கள் மட்டும் போட்டியில் இருக்கிறது.

திமிரு பிடிச்சவன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. சர்கார் படத்தினை தயாரித்திருப்பது சன் பிக்ச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.