வவுனியாவில், 'தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2018 நினைவேந்தல்!

தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 21
தொடக்கம் 27 வரையான 'நினைவேந்தல் வாரத்தை' இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை 'நினைவு கூருதலுக்கான பொதுநாளாக' தேர்ந்தெடுக்கும் விசமத்தனமான பிரசாரத்தில் கயமைக்கூட்டம் ஒன்று ஈடுபட்டிருக்கும் சூழலில், ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி, கர்வத்தோடும் - பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துமாறு தமிழீழ மக்களிடம் வலியுறுத்தி கூறியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு,
2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.
குறித்த நினைவேந்தல் எழுச்சி தொடர்பாக, பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடக அறிக்கை
2018 நவம்பர் 27
தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மான மாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற நாள், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27'.
'எங்களின் சாவு உங்களின் வாழ்வு' எனச்சொல்லி வீழ்ந்தவர்களை, விசுவாசமாகவும் - நன்றியுணர்வாகவும் நினைந்துருகி வழிபடும் உயர்குலப்பண்பாட்டின் செல்நெறிநின்று, மாவீரத்தெய்வங்களை நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து கர்வத்தோடும் - பெருமையோடும் அஞ்சலித்து 'வீரவணக்கம்' செலுத்தியே வந்திருக்கிறது தமிழர் தேசம்!
கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும். தாயகம் - தமிழகம் - புலம்பெயர் தேசங்கள் எங்கும் சுயமாகவே எழுச்சி கொண்டு 'விடுதலைக்கான வேட்கையோடு' நிற்கிறார்கள் தமிழர்கள். எங்கிருந்து தான் வந்து சேருகிறதோ? இதற்கான பலம் - நலம் - சக்தி. இந்த மிடுக்கையும், அழகையும் கொடுக்கும் ஆதிமூலமே 'துயிலறைக் காவியங்கள் தான்!'
தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான 'நினைவேந்தல் வாரத்தை' இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை 'நினைவு கூருதலுக்கான பொதுநாளாக' தேர்ந்தெடுத்து, அந்நாளில் இந்திய மற்றும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தோடு கூட்டுச்சேர்ந்து தமிழ் இனப்படுகொலைகளை நிகழ்த்திய 'புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ' போன்ற ஆயுத குழுக்களில் இருந்து மரணமடைந்தவர்களையும் இணைத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்று, தமது அரசியல் பதவி, அதிகாரங்களை பயன்படுத்தி கடுமையான பிரயத்தனங்களை எடுத்து வருகின்றது ஒரு கயமைக்கூட்டம்.
ரெலோ கட்சியின் செயலாளர் சிறீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் செயலாளர் மாவை.சேனாதிராசா, ஈ.பி.டி.பி  கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் போன்றவர்கள் இந்த விசமத்தனமானதும் - விசித்திரமானதும் ஆன கருத்துகளை பரப்பி வந்துள்ளனர்.
தற்போது இந்த கூட்டணியில் தமிழ் இனத்துரோகிகள் கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களும் இணைந்து கொண்டு, தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான 'நினைவேந்தல் வாரத்தை' மாற்றி அமைத்தே ஆக வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கும் 'நினைவு கூருதலுக்கான அந்தப் பொதுநாளில்' தமது குழுக்களில் இருந்து 'தேசவள துரோகத்துக்காக' மரண தண்டனை வழங்கப்பட்டவர்களையும் தமிழ் சமூகம் அஞ்சலிக்க வேண்டும் என்றும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
இதில் புளொட் கட்சியின் பொருளாளர் சிவநேசன் (பவான்) இன்னும் ஒருபடி மேலே சென்று, வடக்கு மாகாண சபையால் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு  'கார்த்திகை' மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மரநடுகையை, தனது புளொட் கட்சியிலிருந்து மரணித்த தோழர்களை நினைவுகூரும் ஜூலை மாதத்திற்கு மாற்ற வேண்டும் என்று துடிக்கிறார்.
ஈழத்தமிழர்களின் தேசிய இன விடுதலைக்கான போராட்டம், மலைபோன்ற மக்கள் சக்தியால் மானசீகமாக பொத்திப்பொத்தி பெருநெருப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அதன் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் வரலாற்றின் அத்தியாயங்களை அசைத்துப்பார்த்தே கடந்து வந்திருக்கிறது. இத்தகைய சர்வவல்லமை பொருந்திய மக்கள் போராட்டத்திலே, (எண்ணிக்கையில் ஆகக்கூடிய) பல ஆயிரம் அக்னிக்குஞ்சுகளை பிரசவித்து, இனமானப்போருக்கு உவந்தளித்து, உலகெல்லாம் வியாபித்திருக்கும் தமிழ் மக்கள் குழுமம், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்ட மரபுகளுக்கு அமைய வழிந்தொழுகி, உணர்வுபூர்வமாக  அனுஷ்டித்து வரும் 'மாவீரர் நாள் எழுச்சி வாரத்தை' இல்லாமல் செய்து  வரலாற்றை திரிபுபடுத்த முனையும் இந்தக் கயமைகளுக்கு, வலிமையான எதிர்ப்பை தெரிவிப்பதோடு தமிழீழ மக்களின் சார்பாக 'வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு' கடும்தொனியில் வலியுறுத்தி கூறுவது யாதெனில்,
'தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், தரகர்கள் அல்ல. அவர்கள் போராளிகள்!'
அன்றே இந்திய மனோநிலையை பிரதிபலிக்காமல், தமிழ் மக்களின் மனோநிலையை பிரதிபலித்தவர்கள். யார் எம்மை நிர்ப்பந்திப்பினும் வல்வளைப்பு செய்யினும், ‘பணிந்தும் - குனிந்தும் கொடாமல், சேவகம் செய்து கெடாமல், நம்மால் முடிந்ததை செய்கின்றோம். முடியவில்லை என்கிறபோது செத்து மடிகின்றோம்’ என்று தாம் வரித்துக்கொண்ட உயரிய கொள்கைக்காகவே வாழ்ந்தவர்கள். வீழ்ந்தவர்கள்.
பௌத்த பேரினவாத சிந்தனைக்குள் ஊறி, உப்பி உருப்பெருத்துக்கிடக்கும் சிறீலங்கா நாட்டுக்குள்,
தமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்துக்கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ளவும், தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக - மீட்பர்களாக - மரபு வழிப்படையணியாக எழுச்சிபெற்று, கட்டமைக்கப்பட்ட ‘தமிழீழ நடைமுறை நிர்வாக அரசை’ நிறுவியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்றே, தமிழ் மக்களின் ஒரே ஏகப்பிரதிநிதிகளாவர்!  
தமிழர் தேசத்தின் அசைவியக்கமாகிய இந்த மாபெரும் தூய விடுதலை இயக்கத்தின் கொள்கை வழி நின்று, உண்மை வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும் - அரசியலுரிமைக்காகவும் ஆயுதமொழி பேசி, தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்து, தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற தேசிய எழுச்சி நாளே மாவீரர் நாள்: நவம்பர் 27.
ஈழதேசத்திலே ‘மக்களுக்காக மக்கள்’ நடத்திய, தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தின்பால் உள்ளீர்க்கப்பட்டு, ‘விடுதலை’ எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதையாக்கிய போராளிகளையும், அந்த விதைகளுக்காக தமது இரத்தம், கண்ணீர், தசை, உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவுகளையும், ஈகையர்களையும், கொடையாளர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும் நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துவோமாக! மாவீர ஆத்மாக்களின் வீரம் செறிந்த கதைகளை ஆவணமாக்கி - பத்திரப்படுத்தி  அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் எடுத்தியம்பும் தேசியப் பெரும் பணியை – தேசியக்கடமையை, 'தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி' நிறைவேற்றுவோம் என்று உறுதி ஏற்குமாறும், தாயகம் - தேசியம் - சுயநிர்ணயம் கோட்பாடுகளில் பற்றுறிதியோடு நிற்கும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அறிவுபூர்வமான இத்தகைய செயல்பாடு ஒன்றே வரலாற்றை மாற்றி எழுதிவிட எத்தனிக்கும், பரிசுத்த நாளுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கயமைக்கூட்டங்களுக்கு தகுந்த பதிலடி நடவடிக்கையாக அமையும்.
2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும்.
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படாத நிலைமையிலும், தூரப்பிரதேசங்களில் இருந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளும் உறவுகளின் இரவு நேரம் மற்றும் மழைக்கால போக்குவரத்துகளை வசதிப்படுத்துவதை கவனத்தில் கொண்டும், நகரசபை உள்ளக மண்டபத்தில் நினைவேந்தலை அனுட்டிப்பதென வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர் போராளி குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்று, ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களுக்கு’ உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நினைவேந்தல் இடம்பெறும் கிட்டிய தூரத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு முடிந்தவரை நேரில் வருகை தருமாறும் அழைக்கின்றோம்.
கூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் - தமிழிச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக்கடமையை, 'தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி' நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்
தொடர்புகளுக்கு:
தலைவர், கோ.ராஜ்குமார் 0094 77 854 7440
செயலாளர், தி.நவராஜ்
ஊடகப்பேச்சாளர், அ.ஈழம் சேகுவேரா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.