காஷ்மீரில் புதிய ஆட்சி?

காஷ்மீரில் பாஜக-மஜக கூட்டணி முறிவை அடுத்து அக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி கடந்த ஜூலை மாதம் கவிழ்ந்தது. அதற்குப் பின் சட்டமன்றம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது காங்கிரஸ் ஆதரவோடு புதிய
ஆட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மஜகவும் ஈடுபட்டிருக்கின்றன. அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சித் தலைவர்கள் விரைவில் சந்திக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் அண்மையில் காஷ்மீர் சென்றிருந்தார். அப்போது மக்கள் மாநாட்டுக் கட்சி என்ற கட்சியை நடத்திவரும் சஜத் லோன் என்பவருடன் இணைந்து, மெகபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியை உடைத்து சில எம்.எல்.ஏ.க்களை கொண்டுவந்து ஆட்சி அமைக்க ஆலோசித்தனர். இதற்கு ஆதாரமாக மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறிய எம்.பி. முசாபர் உசேன், “பாஜக ஆதரவுடன் மக்கள் மாநாட்டுக் கட்சியோடு இணைந்து புதிய ஆட்சி அமைக்கத் தயார்” என்று அறிவித்தார்.

இது அம்மாநில காங்கிரஸ் கட்சியை தட்டி எழுப்பிவிட்டது. டிசம்பர் மாதம் வந்தால் சட்டமன்றம் முடக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிடும், அதற்குள் ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவு கூட எடுக்கக் கூடும். எனவே அதற்குள் பாஜக அல்லாத ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முயன்றது. இதன் பலனாக தீவிர எதிரிக் கட்சிகளாகக் கருதப்படும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா ஆகிய தலைவர்களோடு காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் அஹ்மது மிர் இதுபற்றி இன்று , “தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டால் அதற்கு காங்கிரஸ் ஆதரவு தரும். ஏற்கனவே இரு கட்சிகளுக்கும் இடையே இதுகுறித்து அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அறிகிறோம். அதை உடனடியாக அவர்கள் அதிகாரபூர்வமானதாக மாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மொத்தம் 87 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காஷ்மீர் சட்டமன்றத்தில் மக்கள் ஜனநாயக் கட்சி 28 உறுப்பினர்களையும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 12 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்தால், இந்த அணிக்கு 55 உறுப்பினர்கள் அதாவது பெரும்பான்மைக்கு அதிகமாகவே ஆதரவு இருக்கிறது. பாஜக 25 இடங்களும், மக்கள் ஜனநாயக் கட்சி 2 இடங்களும் பெற்றுள்ளன.

காஷ்மீரில் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் அம்மாநிலத் தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைத்திருக்கிறது மத்திய அரசு.

No comments

Powered by Blogger.