சுர்பி இல்லாத ‘இஷ்குபாஸ்’ வேண்டாம்!

இந்தி நாடகங்கள் தமிழகத்தில் பிரபலமாவது புதிதல்ல. சமீபத்தில் வெற்றிபெற்ற நாகினி தொடர் முதல், சில வருடங்களுக்கு முன்பு கோலோச்சிய ‘கீத்’ நாடகம் வரை ஒரு புதுவித அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குக் கொடுத்துவந்தன இந்தி நாடகங்கள். தற்போது ஒளிபரப்பாகும் தமிழ் நாடகங்களில் அதிக வண்ணங்கள்
பயன்படுத்தப்படுவதற்கே, இந்தி நாடகங்கள்தான் முன்னுதாரணம் எனலாம்.

டிடிஎச் பரவலாகிவிட்ட இக்காலத்தில் இந்தி நாடகங்களைப் பார்ப்பதற்கு அத்தனை மெனெக்கெட வேண்டியதில்லை எனும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், தமிழகத்தில் பிரபலமான நாடகம் ‘இஷ்குபாஸ்’. மூன்று அண்ணன் தம்பிகளின் காதல் கதைகளை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சுவாரசியமாக நகர்ந்த இஷ்குபாஸ் நாடகத்தின் முகம் என்றால் அது நகுல் மேத்தா-சுர்பி சந்த்னா ஜோடியின் ரொமாண்டிக்கான காதல் கதைதான்.
ஆத்மார்த்தமான காதலர்களாகத் திரையில் தோன்றிய இவர்களுக்காகவே நாடகம் பார்த்த பலர் இருந்தனர். ஆனால், தற்போது தொடங்கப்படவிருக்கும் இரண்டாவது தொடரில் நகுல் - சுர்பி ஜோடி ஒன்று சேரப்போவதில்லை என்று தெரிந்ததால், அந்த நாடகத்தையே நிறுத்திவிடுங்கள் என்று கொந்தளித்துள்ளனர் ரசிகர்கள்.

காதலர்களைப் பிரிக்க வேண்டாம் என்று அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து, ஒரு மகனையும் பெற்றெடுத்து வளர்த்தது போலத்தான் இஷ்குபாஸ் 2 கதையினை எழுதியிருக்கின்றனர். ஆனால், மகன் கேரக்டரிலும் நகுல் நடிப்பதாக கதை வடிவமைக்கப்பட்டிருந்தது. அம்மா கேரக்டரில் நடிக்கும் அளவுக்குத் தனது மார்க்கெட் சரிந்துவிடவில்லை என்று கருதிய சுர்பி இந்தக் கதையிலிருந்து விலகிவிடுவதாக அறிவித்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.