உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துக: மதிமுக

கஜா புயலால் தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்நேரம் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாட்டில் இருந்தால் நிவாரண உதவிகள் வழங்குவது இன்னும் வேகமாக நடைபெற்றிருக்கும் என்று மதிமுக உயர் நிலைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று (நவம்பர் 21) , காலை, திருச்சியில் நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

“கஜா புயல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை, தற்காலிகமான தேவையை நிறைவேற்றுமேயொழிய எந்த வகையிலும் வாழ்வாதரங்களைப் பறிகொடுத்த மக்களுக்கு நிரந்தரத் தீர்வு ஆகாது. புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். தென்னை விவசாயத்திற்கு முகாமையான பகுதியாக இருக்கும் காவிரி டெல்டாவில், ‘கஜா’ புயல் ஏற்படுத்தி உள்ள பாதிப்பு, சொல்லொணாத கொடுமை ஆகும். அரசு கணக்கெடுப்பின்படி 75 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டிருந்த 52 இலட்சத்து 67 ஆயிரத்து 500 தென்னை மரங்கள் முறிந்து விழுந்து பெரும் நாசம் விளைந்து விட்டது.

தென்னை விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பு பலன் இன்றி ஒரே நாளில் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு இரத்தக் கண்ணீரில் மிதக்கிறார்கள். புயலால் முறிந்து விழுந்த தென்னை மரம் ஒன்றுக்கு இழப்பீடு ரூ. 600 என்றும், அதனை வெட்டி அகற்ற ரூ. 500 என்றும் ஆக மொத்தம் ரூ. 1,100 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருப்பது தென்னையை நம்பி உள்ள குடும்பங்களுக்கு எந்த வகையிலும் ஈடாகாது. சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதே இழப்பீடுத் தொகையை ‘கஜா’ புயலில் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மேலும், “ மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களுக்கு ரூ. 30 ஆயிரமும், அவற்றை வெட்டி அகற்றுவதற்கு ஆகும் முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம், நில வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்னொரு தீர்மானத்தில்,. “மழை, வெள்ளம் மற்றும் புயல் உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும் நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், தமிழக உள்ளாட்சிகள் செயலற்றுக் கிடக்கும் நிலைமை வேதனை தருகிறது. புயல், மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, குடிநீர், பாதுகாப்பான இருப்பிடம் போன்றவற்றை உறுதி செய்யவும் உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இருப்பது இன்றியமையாதது ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது மதிமுக. 

No comments

Powered by Blogger.