கேரள எம்.பி. ஷானவாஸ் மரணம்!

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஷானவாஸ் இன்று அதிகாலை மரணமடைந்தார்.


கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியின் எம்.பி.யாகவும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துவந்தனர் எம்.ஐ.ஷானவாஸ். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 2ஆம் தேதி அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 21) அதிகாலை 1.30 மணிக்கு ஷானவாஸ் (வயது - 67) உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஷானவாஸ் பின்னர் இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவர், கேரள காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளர், துணை தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். 1987, 1991 மற்றும் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களிலும் 1999 மற்றும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்ட ஷானவாஸ் தோல்வியடைந்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஷானவாஸ் உடல் இன்று கேரளா கொண்டு செல்லப்படுகிறது. கொச்சியில் உள்ள தொட்டதும் பாடி ஜும்மா மசூதியில் நாளைக் காலை 10 மணிக்கு அவரது இறுதி சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் ஷானவாஸ் மறைவுக்கு தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.