தேசிய அரசியலில் கூத்தமைப்பு இறங்கிவிட்டதா?

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைக் காப்பாற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சியைவிட அதிகமாகப் பாடுபடுகின்ற கட்சி தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு என்றால் அதுமிகையன்று.


இலங்கையின் ஆட்சிப்பீடத்தில் யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதென்பது வேறு. ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்களால் தமிழ் இனத்துக்கு என்ன நன்மை என்று பார்ப்பது வேறு.

அந்தவகையில் சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் தமிழ் மக்களுக்கு எதுவும் தரமாட்டார் கள் என்பது நிறுதிட்டமான உண்மை.

இந்த உண்மையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்னமும் உணரவில்லை என்றால், அவர்கள் தமிழ் மக்களின் நலனில் எந்தவித அக்கறையும் இல்லாதவர் கள் என்பதைத் துணிந்து கூறமுடியும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கையை இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூடவந்த அனுமன் ஆண்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

நிலைமை இதுவாக இருக்கையில், சர்வதேசப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; தமிழ் மக்களின் அவலங்கள் பற்றியோ, தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை பற்றியோ, காணாமல்போனவர்களின் உறவுகள் விடுகின்ற கண்ணீர் பற்றியோ எடுத்துக் கூறுவதாக இல்லை.

சரி பரவாயில்லை. இதைத்தான் செய்யவில்லை என்றால், இலங்கையின் சமகால அரசியல் போக்கு தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால் சர்வதேச சமூகம் இதுவிடயத்தில் தலையிட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முடிவுகளை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் யார் பிரதமர், யார் அமைச்சர்கள் என்று நிறுதிட்டமாகக் கூறமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதெனில் அதன் பாதிப்பு தமிழ் இனத்துக்கானதாகவே இருக்கும்.

ஆகையால், இலங்கையில் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு சர்வதேசத்தின் தலையீட்டுடன் தமிழ் மக்களுக்கான உரிமைகள் பெறப்பட வேண்டும்.

இலங்கை அரசு குழம்பினாலும் குழப்பப்பட்டாலும் தமிழர் தாயகத்தின் அரசியல் என் பது ஸ்திரத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

இதற்கான ஏற்பாட்டை சர்வதேசம் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்துவதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும்.

ஆனால் அதனை அவர்கள் செய்யாமல் இலங்கையில் பிரதமராக யார் இருக்க வேண் டும் யாருடைய அரசு நிலைக்க வேண்டும் எனக் கூறுவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உப குழுவா என்று எண்ணத் தோன்றும்.

அந்தளவுக்கு கூட்டமைப்பின் போக்கு தேசிய அரசியலில் கவனம் செலுத்துவ தாகவே இருக்கிறது.

கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட கூட்டமைப்பின் தலைமைக்கு தமிழ் மக்களின் எதிர் பார்ப்புக்கள் தெரிந்திருக்க நியாயமில்லை என்றாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாகிவிட்டு சிங்களத் தரப்புகளைக் காப்பாற்றப் பாடுபடுவது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.

- Valampuri
#Tamilnews  #Tamil  #Srilanka #Jaffna #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.