தலையை சுத்தும் 2.0 பிசினஸ்!

2.0 உடன் வியாபாரப் பயணம் - 3
-இராமானுஜம்
கட்டுரையை எழுதுகிற போது வார்த்தைகள் விடுபட்டாலோ, இடம் மாறினாலோ படிக்கும் வாசகர் புரிந்து கொள்வதில் தவறு ஏற்படும்
அப்படியொரு பிழை சென்ற கட்டுரையில் ஏற்பட்டமைக்காக மன்னிக்கவும்.
திருத்தம்: “வெளிநாட்டு விநியோக உரிமை, தொலைக்காட்சி உரிமை, ஆடியோ உரிமை ஆகியவற்றின் மூலம் 200 கோடி ரூபாய் வியாபாரம் நடக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடக மாநில விநியோக உரிமை வியாபாரம் மூலம் 100 கோடி ரூபாய் கிடைக்க வேண்டும். 600 கோடி ரூபாய் பட்ஜெட் முதலீட்டில், மேற்கண்ட 300 கோடி ரூபாய் போக, எஞ்சிய 300 கோடி ரூபாயை, தமிழகம் மற்றும் வட இந்தியாவில் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகளில் வசூலாகும் மொத்த தொகையில் தயாரிப்பாளர் பங்கு தொகையாக 300 கோடி ரூபாய் கிடைக்கவேண்டும். அதற்கு, சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை ஆக வேண்டும்” என்று நேற்றைய கட்டுரையில் இருக்க வேண்டியது, 400 கோடி வசூலாக வேண்டும் என தவறுதலாக இடம் பெற்றுள்ளது. இப்போது தொடரின் மூன்றாம் பகுதியைப் பார்ப்போம்.
‘ரசிகர் மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது’ என்று 2.0 பட வெளியீடு நேரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கையாக ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் அனுப்பியிருக்கிறார்.
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உச்சத்தைத் தொட்ட 1980 முதல் 2018 வரையிலான கடந்த 38 ஆண்டுகளில், இவர் நடித்த எந்த படத்திற்கும் ரசிகர் மன்றங்களுக்கு இப்படியொரு அறிவிப்பை ரசிகர் மன்றத் தலைமை வெளியிட்டது இல்லை. தமிழக அரசியல் களத்தில் ரஜினியின் ஒவ்வொரு செயலும் அவரது பேச்சுகளும் கூர்ந்து கவனிக்கப்படுவதுடன், விமர்சனத்துக்கும் உள்ளாகிவருகின்றன. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை; எங்கும் ஊழல்; இதில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ரஜினிகாந்த் தொடர்ந்து பேசிவருகிறார். இந்தச் சூழலில் அவர் நடித்து வெளிவர உள்ள 2.0 படம் சுமார் 200 கோடி ரூபாய் தயாரிப்பாளரின் பங்குத் தொகையாகக் கிடைக்க 400 கோடி ரூபாய் தமிழகத்தில் படம் திரையிடப்படும் தியேட்டர் வசூல் மூலம் கிடைக்க வேண்டும்.
அதிக விலைக்கு விநியோகஸ்தர்கள் வாங்கக்கூடிய திரைப்படங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தமிழகத் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதில்லை. படம் வெளியாகும் முதல் நாள் ரசிகர் மன்ற காட்சி, சிறப்புக் காட்சி என படத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது ரஜினி, விஜய், சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு தொடர்ந்து நடந்துவருகிறது. இது சட்டத்துக்கு புறம்பானது என்றாலும் இதனைக் கட்டுப்படுத்த அரசு எந்திரம் எப்போதும் முயற்சிப்பதில்லை. தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்திற்கு இது போன்ற நடைமுறை பின்பற்றப்பட்டதால் முதல் நாள் 31 கோடி ரூபாய் வசூலானது.
75 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டு உரிமை விற்கப்பட்ட சர்கார் படத்திற்கே இந்த நிலை என்றால் 200 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்ய திட்டமிட்டுள்ள 2.0 படத்திற்கான டிக்கெட்டுகளின் விலை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 9 விநியோக ஏரியாவுக்கு 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா கூறும் விலைக்கு படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. திரையரங்கு உரிமையாளர்களுடன் நேரடி ஒப்பந்தம் செய்ய லைகா முயற்சித்து வருகிறது.
2.0 படம் 3D படமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வசதியுள்ள திரையரங்குகள் தமிழ் நாட்டில் 250 மட்டுமே உள்ளன. சுமார் 700 திரைகளில் படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ள லைகா நிறுவனம் 3D தொழில்நுட்பத்தை தாங்களே தியேட்டர்களில் ஏற்படுத்திக் கொடுக்க 5 லட்ச ரூபாய் திரும்பிப் பெற இயலாத கட்டணமாகக் கேட்கிறது. இதனை ஏற்க தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.
தமிழில் தயாரிக்கப்படும் அனைத்துப் படங்களும் 3D தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுவதில்லை. 2.0 படத்தைத் திரையிடுவதற்காக 5 லட்சம் ரூபாயை தியேட்டர் உரிமையாளர்கள் முதலீடு செய்ய தயாராக இல்லை.
3D தொழில்நுட்பம் இல்லாத தியேட்டர்களில் 2.0 படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் அறிந்துகொண்ட ரஜினிகாந்த் படத்தின் ரிலீஸ், அதிக விலைக்கு டிக்கெட் விற்பது போன்ற சிக்கல்களில் தன்னை சம்பந்தப்படுத்தி விமர்சனங்கள் வருவதை தவிர்க்க விரும்பியதால் ரசிகர் மன்றங்களுக்கு இப்படியொரு கடிதத்தை அனுப்பினார் என்கின்றனர் ரஜினிகாந்த் வட்டாரத்தில்.
ஊழலை ஒழிக்கவும், அரசியல் மாற்றத்தை கொண்டு வரவும் கட்சி தொடங்கப்போவதாக கூறிவரும் ரஜினிகாந்த் 2.0 படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க முயற்சிக்கவில்லை என்று பட ரிலீஸுக்குப் பின் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கவும், விமர்சனம் செய்யவும்கூடும். அப்போது ரசிகர் மன்றங்களுக்கு அனுப்பபட்ட கடிதத்தைக் கூறித் தப்பித்துக்கொள்ளவே இப்படியொரு கடிதம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
படம் வெளிவர ஏழு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்தில் வியாபாரத்தை முடிக்க வேண்டிய சூழலில் மதுரை ராமநாதபுரம் ஏரியா உரிமையை 15 கோடி ரூபாய்க்கு பிரபல ஃபைனான்சியர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியனுக்கு விநியோக அடிப்படையில் வழங்கியுள்ளது. கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையும் லைகா நிறுவனம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்புச் செழியன் 2.0 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால் மற்ற ஏரியாக்கள் உரிமையை முன்ணனி விநியோகஸ்தர்கள் வாங்கக்கூடும்.
தமிழ் சினிமா விநியோக வியாபாரம், எத்தனை கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தாலும் தமிழகத்தில் அதிகபட்சமாக இதுவரை வெளியான படங்களுக்கு என்ன வசூல் ஆகியிருக்கிறது, எவ்வளவு ஆகக்கூடும் என்கிற விவரம் அறிந்தும், 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க என்ன காரணம்?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.