அமைச்சர்களை பாராட்டும் வைகோ

கஜா புயல் நிவாரணப் பணிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 7வது நாளாக இன்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்திவருகின்றனர். பல இடங்களில் அமைச்சர்களின் கார்களை முற்றுகையிட்டு மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 23) செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கஜா புயலால் 85 ஆயிரம் மின்கம்பங்களும், ஆயிரக்கணக்கான டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துவிட்டன. உடனே மின்வாரிய ஊழியர்கள், தங்களது உயிரை துச்சமென கருதி செயல்பட்டனர். பணியில் இருந்த இரண்டு ஊழியர்கள் இறந்துவிட்டனர். ஒருவர் கோமா நிலையில் உள்ளார். இதனை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும், மின்சாரம் வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமில்லை” என்று குறிப்பிட்டார்.
“20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள், காவல் துறையினர் இரவு பகலாக உணவு, குடிநீர் இல்லாமல் பணியாற்றிவருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் செயல்படுகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் இவ்வளவு சிறப்பாக எங்கேயும் செயல்பட்டிருக்க முடியாது. அரசு ஊழியர்கள் இதைவிட சிறப்பாக செய்யமுடியாது. சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மின் துறை ஆகியவை சிறப்பாக செயல்பட்டுள்ளன” என்று தெரிவித்த வைகோ, குட்கா ஊழல் புகாருக்கு ஆளான விஜயபாஸ்கரை நான் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளேன். ஆனால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோர் இரவு பகல் பாராமல் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்தியாவில் சிறந்த அதிகாரிகள் தமிழக அதிகாரிகள் என்ற பெயர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதனை மீண்டும் தற்போது நிலைநாட்டியுள்ளனர் என்றும் பாராட்டுத் தெரிவித்தார்.
“நிவாரணம் கிடைக்கவில்லை என்பதற்காக போராடும் மக்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தூண்டிவிடவில்லை” என்று தனது பேட்டியில் குறிப்பிட்ட வைகோ, மீட்புப் பணிகளை நாங்கள் அரசியலாக்கவில்லை. தஞ்சாவூரில் முகாமிட்டு அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தால் முதல்வர் மீது குற்றச்சாட்டு வந்திருக்காது. கேரளாவில் பினராயி விஜயன் செயல்பட்டது போல அவர் செயல்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் காரிலேயே சென்றுகொண்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், வைகோ இவ்வாறு பாராட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.