இந்திய அணி தோற்றது ஏன்?

மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

மகளிர் டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆண்டிகுவாவில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று (நவம்பர் 22) களமிறங்கின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க இணையான ஸ்மிருதி மந்தனாவும், தனியா பாட்டியாவும் சற்று நிதானமாக விளையாடி 43 ரன்களை முதல் விக்கெட்டுக்குச் சேர்த்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதனால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ரன் ரேட்டும் உயரவே இல்லை.
ஒரு கட்டத்தில் 89க்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்தியா, 104 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இந்தியாவால் 19.3 ஓவர்களில் 112 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 24 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். ரோட்ரிக்ஸ் 26 ரன்களும், கேப்டன் கவுர் 16 ரன்களும் சேர்த்தனர். தமிழக வீராங்கனை ஹேமலதா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகளும் சொற்ப ரன்னில் வெளியேறினர். இங்கிலாந்து அணியின் தரப்பில் நைட் 3 விக்கெட்டுகளையும், கோர்டன், எக்கல்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
எளிய இலக்கைத் துரத்திய இங்கிலாந்து 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 116 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சர்மா, யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் தோற்றதால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை இந்திய அணி இழந்தது.
13.3 ஓவரிலிருந்து 18.4 ஓவர் வரை இருந்த 31 பந்துகளில் மட்டும் இந்தியா தனது 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த இடைவெளியில் வெறும் 15 ரன்களை மட்டுமே அடித்த இந்தியா, ஒரு பவுண்டரியைக்கூட அடிக்கவில்லை. இதுவே இந்திய அணியின் தோல்விக்கும் இங்கிலாந்தின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.
இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.