மாணவியிடம் அத்துமீறல்: எஸ்ஆர்எம் கல்லூரியில் போராட்டம்

சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் மாணவியிடம் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சித்ததாகக் கூறி,
நேற்று நள்ளிரவில் அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கிவருகிறது. இங்கு இரண்டாமாண்டு படித்துவரும் மாணவி வித்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) நேற்று (நவம்பர் 22) மதியம் 3 மணியளவில் விடுதியிலுள்ள தன்னுடைய அறைக்குச் செல்வதற்காக லிப்டில் ஏறினார். அப்போது, அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரும் லிப்டில் ஏறினார். இருவர் மட்டுமே இருக்கும் இடத்தில் ஊழியர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பிக்க முயன்ற வித்யாவை, அந்த ஊழியர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதற்கிடையில், 4ஆவது மாடியில் லிப்ட் நின்றதும் சத்தம் போட்டுக்கொண்டே வித்யா வெளியே ஓடி வந்துள்ளார்.
இது குறித்து விடுதிக் காப்பாளரிடம் அம்மாணவி முறையிட்டார். ஆனால், மாணவி கூறியதை நம்பாத விடுதிக் காப்பாளர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னரே, மாணவி கூறியது உண்மை என்று உணர்ந்து பதிலளிக்க ஆரம்பித்துள்ளார். “முதலில் போய் உன்னுடைய ஆடையை மாற்றிக்கொண்டு தூங்கச் செல்; உன்னுடைய ஆடைதான் இதற்கு காரணம்” என்று விடுதிக் காப்பாளர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், விடுதிக்கு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்.
கல்லூரிப் பதிவாளரிடம் முறையிட்டபோது, இது குறித்து மின்னஞ்சல் அனுப்பிவிட்டுக் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதற்குக் காரணமான நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என கல்லூரி இயக்குநர் தெரிவித்தார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதா என்ற எங்கள் கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று ஒரு மாணவி கூறினார்.
“இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதல்முறை கிடையாது. விடுதியில் வராந்தா பக்கத்தில் ஜன்னல் இருக்கும் அறைகளில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எட்டிப்பார்த்த சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளன. இது குறித்துப் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் மாறவில்லை. இது பற்றி முறையிடும்போதெல்லாம், எங்கள் ஆடைதான் காரணம் என கூறுகின்றனர்” என மற்றொரு மாணவி கூறினார்.
இது குறித்து எந்த புகாரும் அதிகாரபூர்வமாகக் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு வரவில்லை என மறைமலைநகர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர், புகார் குறித்து நிர்வாகம் விசாரிக்கும் என்று கூறினார். மேலும், “இது குறித்து மாணவர்கள் எங்களிடம் பேசிவருகின்றனர். பிரச்சினை எதுவாக இருந்தாலும், அது கவனிக்கப்படும். அப்படி ஏதாவது சம்பவம் நடந்தாலும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மாணவ, மாணவியரின் போராட்டம் குறித்து மேலும் பல தகவல்களை, இன்று மாலை 7 மணிப் பதிப்பில் காணலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.