துணை முதல்வர், மத்திய அமைச்சரின் கார் முற்றுகை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவ்வழியாகச் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரை முற்றுகையிட்டனர். இதுபோலவே
கந்தர்வக்கோட்டையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் காரும் முற்றுகையிடப்பட்டது.
கஜா புயல் வீசி ஒரு வாரமாகிவிட்ட நிலையில், இதுவரை நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. மின்சாரம், உணவு, முறையான குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறி ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை என்ற ஆத்திரத்தில் இருக்கும் மக்கள், அமைச்சர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களின் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆளுநர் நேற்று திருவாரூரில் ஆய்வு செய்த நிலையில், மேட்டுப்பாளையம் கிராமம் அருகே அவரது காரை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.
மன்னார்குடி 33வது வார்டில் இதுவரை புதிய மின்கம்பங்கள் வரவில்லை என்று கூறி நெடுவாக்கோட்டை பகுதி மக்கள்  (நவம்பர் 23) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள், பொன்.ராதாகிருஷ்ணன் காரை முற்றுகையிட்டனர். இதனால் காரிலிருந்து இறங்கிவந்த அவர், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவரிடம், “எங்கள் பகுதிக்கு புதிய மின்கம்பங்கள் இன்னும் வரவில்லை, இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர், மின்கம்பங்களை அனுப்பி வைக்க பரிந்துரைக்கிறேன் என்று உறுதியளித்தார். இதனையடுத்து மறியலைக் கைவிட்ட மக்கள், பொன்.ராதாகிருஷ்ணன் காருக்கு வழிவிட்டனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையும் மக்கள் முற்றுகையிட்டனர்.

No comments

Powered by Blogger.