மலையாளத்திலிருந்து ஒரு மதுரை பொண்ணு

கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடித்து வரும் தேவராட்டம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள மஞ்சிமா மோகன் தமிழில் கதாநாயகியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானார். சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி மேல் இருந்த எதிர்பார்ப்பை அப்படம் முழுமையாகப் பூர்த்தி செய்யாவிட்டாலும் பாடல்கள் தனிக் கவனம் பெற்றன. சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்களும் அவரைத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கொண்டு செல்லவில்லை.
அந்தப் படங்களுக்கு முன்பும் அதற்கு பின்பும் மஞ்சிமாவுக்கு தமிழில் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் கிளாமர் வேடங்கள் என்றால் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்த மஞ்சிமா அந்தப் படங்களை ஏற்கவில்லை. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய திரையுலகில் முக்கியமான படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் என்.டி.ஆரின் பயோ பிக், மலையாளத்தில் குயின் படத்தின் ரீ மேக்கான ஜம் ஜம் ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. தமிழில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்துவந்தார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் மதுரைப்பெண்ணாகவே மாறி நடித்துள்ள மஞ்சிமாவுக்கு இதன் மூலம் தமிழில் ரசிகர் பட்டாளம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.
சட்டக் கல்லூரி மாணவராக கௌதம் கார்த்திக் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் தெரிவித்துள்ளார். குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இந்தப் படத்தை இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த மாதம் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் விரைவில் டிரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
Powered by Blogger.