பாலியல் தொல்லை

எஸ்ஆர்எம் கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த ஊழியர் அர்ஜுனைக் கைதுசெய்திருப்பதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர்.சென்னை காட்டங்கொளத்தூரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்து வரும் மாணவியிடம் அங்கு பணிபுரியும் ஊழியர் அர்ஜுன் லிஃப்டில் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகக் கூறி நேற்று நள்ளிரவு 1 மணி வரை விடுதி வளாகத்துக்குள் மாணவர்கள் போராட்டம் நடத்தியது குறித்து இன்று மதியம் 1 மணி பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தச் சம்பவம் குறித்துத் தெரிந்துகொள்ள எஸ்ஆர்எம் கல்லூரிக்குச் சென்று அங்கு வெளியூர்களிலிருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவிகளிடம் விசாரித்தோம். “மாணவி லிஃப்டில் இருக்கும்போது ஊழியர் அர்ஜுன் ஆபாசமாக நடந்திருக்கிறார். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறியபோது, அவர் நம்பவில்லை. பிறகுதான் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இது குறித்துச் சமூக வலைதளங்களிலும் வீடியோ வெளியிட்டோம். இருப்பினும், இப்படியொரு சம்பவம் நடக்காதது போன்று நிர்வாகம் காட்டிக்கொள்கிறது” என்று மாணவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, இந்த சம்பவம் குறித்து பதிலளிக்க மறுத்ததோடு, அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை, கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறிவிட்டனர்.

இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தோம். சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கூடுதல் விவரங்களுக்காக போலீசிடம் மேலும் சில கேள்விகளை கேட்டபோது, “இதுபோன்று துருவித் துருவிக் கேள்வி கேட்டால், உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டியிருக்கும்” எனக் காவல் நிலைய எஸ்ஐ கூறினார். 

No comments

Powered by Blogger.