தோனி உடைத்த ரகசியம்!

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் வழக்கமான பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்னதாகவே தான் களமிறங்கியதன் காரணத்தைத் தற்போது வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி.
1983ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்தியா, அதன்பின்னர் சுமார் கால்
நூற்றாண்டுக்காலம் கடந்து 2011ஆம் ஆண்டு இலங்கையை வீழ்த்திக் கோப்பையைக் கைப்பற்றியது. இம்முறை கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் இறுதிப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 91 ரன்களையும் குவித்தார் தோனி. வெற்றிக்கான கடைசி ரன்னை அடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அதை லாங் ஆனில் சிக்ஸருக்கு விரட்டியதும் அந்த உலகக் கோப்பையில் தோனிக்குக் கிடைத்த கூடுதல் சிறப்புத் தருணங்களாக அமைந்தன.
வழக்கமாக கடைநிலையில் களமிறங்கும் தோனி இறுதிப் போட்டியில் முன்னதாகவே களம் கண்டார். ஒருவேளை இந்த ஆர்டர் மாற்றத்தால் பேட்டிங்கில் சொதப்பி இந்தியா தோற்றிருந்தால் இந்தியாவின் தோல்விக்கு தோனிதான் காரணம் எனக் கூறியிருப்பார்கள். வெற்றிபெற்றதால் எப்படியோ அந்த அவப்பெயரில் சிக்காமல் தப்பித்தார் தோனி. போட்டி முடிந்து பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அந்தப் போட்டியில் முன்னதாகவே களமிறங்கியதன் காரணத்தைத் தற்போது கூறியுள்ளார் தோனி.
அதன்படி,நவம்பர் 21ஆம் தேதி நாக்பூரில், ‘எம்.எஸ்.தோனி ரெஸிடெண்டியல் அகாடமி’ திறப்பு விழாவிற்கு வந்திருந்தபோது இதுகுறித்து பேசிய அவர், “இலங்கை அணியிலிருந்த பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவர்கள். முரளிதரனும் அந்த நேரம் பந்துவீசிக் கொண்டிருந்தார். பயிற்சியில் அவரது பந்தை பலமுறை சந்திந்து இருந்ததால் அவரது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் எனக் கருதினேன். நான் முன்னதாகக் களமிறங்கியதன் முக்கியக் காரணங்களுள் இதுவும் ஒன்று” என்றார்.

No comments

Powered by Blogger.