மேகாவின் அசத்தல் அறிமுகம்!

பல படங்களில் நடித்துவிட்டாலும் மேகா ஆகாஷ் நடித்த எந்தப் படம் முதலாவதாக வெளிவரும் எனும் விஷயம் ‘மேகா ஆர்மி’க்குத் தெரியாமலேயே இருந்துவந்தது. தற்போது ஒருவழியாக அதற்கு விடை
கிடைத்துள்ளது.
நடிகர் நிதின் நடித்த ‘லை’ எனும் படம் வாயிலாக தெலுங்கில் அறிமுகமான மேகா ஆகாஷ், மீண்டும் நிதினுடன் இணைந்தே சல் மோகன் ரங்கா எனும் படத்தில் நடித்தார். இவற்றின் வாயிலாகக் கவனம்பெற்று கோலிவுட்டுக்கு வந்த அவருக்கு, முதல் படமே பெரிய படமாக அமைந்தது. அந்த வகையில், இயக்குநர் கெளதம் மேனன் இயக்க, நடிகர் தனுஷுடன் இணைந்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
அதன் பின்னர் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்க, நடிகர் அதர்வாவுடன் பூமராங் எனும் படத்தில் நடித்த அவருக்கு, அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தில் நடிக்கும் சூப்பர் டூப்பர் வாய்ப்பும் கிடைத்தது. இதற்கிடையே சுந்தர்.சி இயக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்திலும் சிம்புவுடன் இணைந்து நடித்துவருகிறார் மேகா ஆகாஷ்.
இப்படியாகச் சென்று கொண்டிருக்கும் மேகாவின் திரைப்பயணத்தில், எனை நோக்கிப் பாயும் தோட்டா எப்போது ரிலீஸ் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரஜினியின் பேட்டயோ, பொங்கலுக்கு வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படமும் அதே பொங்கலுக்கு வரவுள்ளது.
இதனால் மேகா ஆகாஷை பொங்கலுக்குத்தான் முதன் முதலாக திரையில் பார்க்கலாம் எனக் கருதிவந்தனர் கோலிவுட் ரசிகர்கள். ஆனால் இந்தப் படங்களையெல்லாம் முந்திக்கொண்டு தற்போது வெளியாகவுள்ளது பூமராங். அதன்படி டிசம்பர் 21ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. மேகாவின் மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளிவரவுள்ளதால் கோலிவுட்டில் மேகாவின் அலை இன்னும் கூடுதலாகவே அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு போக, சூரஜ் பஞ்சோலி நடிப்பில் இயக்குநர் இர்ஃபான் கமல் இயக்கும் சாட்டிலைட் ஷங்கர் எனும் இந்திப் படத்திலும் தற்போது இணைந்துள்ளார் மேகா.

No comments

Powered by Blogger.