தளபதி ரசிகனின் இசைப் பயணம்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் டீசர்  (நவம்பர் 23) வெளியாகியுள்ளது. டீசரின் தமிழ் பதிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, தெலுங்கு பதிப்பை ராஜமௌலி
வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முழுநேர நடிகனாக வலம் வரத்தொடங்கிய பின் பரபரப்பாக இயங்கிவருகிறார். முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகிவருவதால் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அவர் கைவசம் ஏராளமாக உள்ளன. கதாபாத்திரங்களுக்காக உடலை வருத்தி நடித்துவருவதால் இயக்குநர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இந்திய அளவில் முக்கியமான ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் ராஜின் மேனன். இவர் இயக்கிய மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்கள் இந்தியத் திரையுலகில் பெரும் கவனம் பெற்றன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இசையை மையமாக கொண்டு சர்வம் தாளமயம் படத்தின் திரைக்கதையை எழுதிய அவர் இசை ஞானம் உள்ள நடிகரை தேர்வு செய்ய நினைக்க, ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைந்தார். குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்தாலும் இசைக்கலைஞரான ஜி.வி.பிரகாஷுக்கு சர்வம் தாளமயம் படத்தின் பீட்டர் ஜான்சன் கதாபாத்திரம் முழுமையாகப் பொருந்தியுள்ளதை டீசரை பார்க்கும் போது உணர முடிகிறது. விஜய் ரசிகராக வலம் வரும் ஜி.வி ‘என் உயிர் மனசு உடல் எல்லாமே தாளமா துடிச்சுகிட்டு இருக்கு’ என்று வசனம் பேசுகிறார்.
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா முரளி இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நெடுமுடிவேணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராஜிவ் மேனனின் முந்தைய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது போல இந்தப் படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். டீசர் முழுக்க ஜி.வியின் உடல் மொழியும் ரஹ்மானின் இசையும் சரியான தாள லயத்தில் இணைந்து செல்கிறது. ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மைண்ட் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சர்வம் தாளமயம் டிசம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

No comments

Powered by Blogger.