படேல் சிலையை விட உயரமாகச் சட்டமன்றம்

ஆந்திர மாநிலத்தில், வல்லபபாய் சிலையை விட உயரமாகச் சட்டமன்றம் கட்டவுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் அவர் தற்போது, வல்லபபாய் படேல் சிலையை விட மிக உயரமாக ஆந்திர மாநில சட்டமன்றத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
விஜயவாடா அருகே அமராவதி என்ற பெயரில் புதிய நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்குச் சட்டமன்ற கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்டப்படவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த, நார்மா பாஸ்டர்ஸ் என்ற நிறுவனம் சட்டமன்ற கட்டிடத்தின் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் இறுதி வடிவம் இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
”3 அடுக்குகளில் கட்டப்படும் இந்தக் கட்டிடத்தின், நடுவே மிகப்பெரிய கோபுரம் கட்டப்படவுள்ளது. அந்தக் கோபுரத்தின் உயரம் குறித்து இதுவரை முடிவு செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது 182 மீட்டர் உயரமுள்ள ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும், வல்லபபாய் சிலையை விட 68 மீட்டர் உயரமாக அதாவது 250மீட்டர் உயரத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நாராயணன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கட்டிடம் கட்டும் பணி இந்த மாத இறுதியில் துவங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோபுரம் லில்லி மலரைக் கவிழ்த்து வைத்தது போல் இருக்கும் எனவும், அதன் மேல் உச்சி வரை மக்கள் சென்று அமராவதி நகரைப் பார்வையிடலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்காகக் கோபுரத்தில் 2 பார்வை மாடங்கள் அமைக்கப்படுகின்றன. கீழிருந்து மேலே கடைசி வரை செல்வதற்கு லிஃப்ட் வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரத்துக்காக போட்டி
2,989 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குஜராத்தில் கட்டப்பட்ட, 182 அடி உயர படேல் சிலையைத் தொடர்ந்து, அயோத்தியில் 201 அடி உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்படும் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி காவிரி தாய்க்கு 125அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவித்தார். மீண்டும் குஜராத்தில் படேல் சிலைக்கு நிகராக புத்தர் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் மிக உயரமான சட்டமன்ற கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.