யுத்தத்தினை ஒழிக்க வழங்கிய ஒத்துழைப்பே தற்போதும் எமக்குத் தேவை: மஹிந்த

யுத்த காலத்தில் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை மக்கள் தற்போதும் எமக்கு வழங்கவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் குழப்பநிலை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மக்களிடையே குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளது. நாம் நாட்டு மக்களுக்கான சிறந்த ஆட்சியினை வழங்கத் தயாராகவுள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்கள் மீது அதிக வரியை சுமத்தி வெளிநாட்டு பயணங்களுக்கு அதிக பணத்தை செலவு செய்தது. அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்தது.
அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் அதிகாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமான வகையில் சிநற்த அமைச்சரவையை நாம் நியமிப்போம்.
இவை அனைத்துக்கும் நாட்டில் நிலையான அரசாங்கமொன்று இருக்க வேண்டும். அந்த புதிய அரசாங்கத்தில் செலவுகளைக் குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை எடுப்பேன்.
எமது கடந்தகால ஆட்சியில் பயங்கரவாதத்தினைத் தோற்கடிப்பதற்கு மக்கள் எமக்கு வழங்கியிருந்த ஒத்துழைப்பு தற்போதும் எமக்குத் தேவையாக இருக்கின்றது. தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலைக்கு எமது அரசாங்கத்தின் மூலமே தீர்வுகாண முடியும்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முன்னர் மக்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினை தற்போதும் நாம் கோரிநிற்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.