உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்கம்பங்களைச் சீரமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்துத் தமிழக முதல்வர்  (நவம்பர் 24) அறிக்கை வெளியிட்டார். “கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
1,13,566 மின் கம்பங்கள், 1,082 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. மின்கம்பங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட 24,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை மனதாரப் பாராட்டுகிறேன்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்த வயர்மேன் சண்முகம் 16ஆம் தேதி மின்கம்பங்களைச் சீரமைக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கடந்த 20ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் களமாவூர் கிராமத்தில் மின்கம்பங்களைச் சீரமைக்கும் பணியின்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த இரண்டு செய்திகளும் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.
இவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சீரமைப்புப் பணியின்போது உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாய், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் என மொத்தம் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவர்களது குடும்பத்தினரில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.