கர்நாடகாவில் பேருந்து விபத்து: 28 பேர் பலி

கர்நாடக மாநிலத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 28 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் கனகனமாரடி கிராமத்தில் காவேரி ஆற்றின் கிளைக் கால்வாய் சாலையில்  (நவம்பர் 24) மதியம் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்தொன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பாண்டவபுரத்தில் இருந்து மாண்டியா நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், முழுவதுமாக நீருக்குள் மூழ்கியது.
இதைப் பார்த்த கனகனமாரடி கிராமத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கால்வாய்க்குள் பேருந்து முழுமையாக மூழ்கியுள்ள நிலையில், அதில் சிக்கியவர்களை உடனடியாகக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் நான்கு சிறுவர்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் படுகாயமடைந்தனர். சனிக்கிழமை மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கின. இதனால், அதிகளவில் சிறுவர்கள்தான் பேருந்தில் இருந்துள்ளனர். பேருந்து ஒட்டுநரும், நடத்துனரும் நீந்தி வெளியே வந்து தப்பி ஒடிவிட்டதாக, அங்கிருந்தவர்கள் கூறினர்.
தீயணைப்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாண்டியா மாவட்டத்தின் தெற்கு எல்லை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத் சந்திரா, மைசூர் எஸ்பி அமித் சிங் மற்றும் சில காவல் துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர். விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, இன்றைக்குத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகக் கூறினார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகப் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.