சிபிஐ குற்றச்சாட்டு: அடிப்படை ஆதாரமற்றவை!

தன் மீது சிபிஐ வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது ஜூன் 13ஆம் தேதியும் ப.சிதம்பரம் மீது ஜூலை 19ஆம் தேதியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணையும் நடத்தியுள்ளது. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் பி.கே.துபே, அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சார்பில் பதில் அறிக்கையைத் தாக்கல் செய்தனர். அதில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சிபிஐ, அமலாக்கத் துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; இந்த வழக்கில் எங்களைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.
நேற்று தனது வாதத்தின்போது, ப சிதம்பரம் செல்வாக்கான நபர் என்றும் சாட்சிகளிடம் தனது செல்வாக்கை செலுத்தி ஆதாரங்களை அழிக்கலாம் என்றும் சிபிஐ கூறியிருந்தது. இதற்கு சிதம்பரம் இன்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,சிபிஐயின் வாதம் தவறானது, ஊகத்தின் அடிப்படையிலானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் எந்தவொரு குற்றமும் நிகழவில்லை. சட்டவிரோதமாக எதுவும் பெறப்படவில்லை. சதியும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.