தாயை விமர்சிப்பதா? - மோடி

இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பையும் தனது தாயாரையும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளதற்குப் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனிநபர் தாக்குதலும் அரங்கேறிவருகிறது.
இந்தூரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னால், இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்போது, மோடியின் ஆட்சியில் அவரது தாயாரின் வயதுபோல் ரூபாயின் மதிப்பு தேய்ந்துள்ளது என்றார். அவரது பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பிரதமர் மோடியும் ராஜ் பப்பரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் இன்று (நவம்பர் 24) நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், “என்னை எதிர்த்துப் போராட சக்தியற்ற காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று மிகவும் கீழ்த்தரமாகச் சென்று எனது தாயாரை அரசியலுக்கு இழுக்கின்றனர். எனது தாயாரின் பெயரை இழுப்பதால் மட்டும் தேர்தலில் டெபாசிட் பெற்றுவிட முடியுமா?
இங்கு நடைபெறும் சிறிய உள்ளாட்சி தேர்தலில்கூட இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி தருமாறு அனைத்துத் தாய்மார்களையும் சகோதரிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
40 வயதுகளைக் கடந்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் சந்தித்த பிரச்சினைகளை ஞாபகம் வைத்திருப்பீர்கள். உங்கள் குழந்தைகள் அந்தப் பிரச்சினையை சந்திக்க அனுமதிப்பீர்களா? அதுபோன்ற வாழ்க்கையை மீண்டும் பெற விரும்புகிறீர்களா? விரும்பவில்லை என்றால், ஒரு முடிவை எடுங்கள்” என்று கூறினார்.
Powered by Blogger.