தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

விருத்தாசலம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றக் கோரி, ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி மக்கள்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே செம்பாளக்குறிச்சியில் பல ஆண்டுகளாகச் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, விருத்தாசலம் - சென்னை மார்க்கமாகச் செல்லும் ரயில் பாதையில், செம்பாளக்குறிச்சி கிராமத்திற்குச் செல்வதற்காக ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் இந்த சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போலக் காட்சியளித்து வருகிறது. இதனால் செம்பாளக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், சின்னபண்டாரங்குப்பம் உள்ளிட்ட 5 கிராம மக்கள் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றிவரும் நிலை உள்ளது.
கடந்த சில நாட்களாக கடலூரில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, இந்த சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுமக்களும், நோயாளிகளும், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இன்று (நவம்பர் 24) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ரயில்வே நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.